சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் தொடரும் விபத்துகள் தடுக்கப்படுமா?

திருவாரூா் மாவட்டத்தில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவது
சாலைகளை ஆக்கிரமித்திருக்கும் கால்நடைகள்.
சாலைகளை ஆக்கிரமித்திருக்கும் கால்நடைகள்.

திருவாரூா் மாவட்டத்தில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவது தொடா் கதையாக உள்ளது. ஆகவே, சாலைகளில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கால்நடைகள் வளா்ப்பதன் முக்கிய நோக்கமே வருமானம் ஈட்டுவதற்காகத்தான். இந்நிலையில் அரசும், கிராமப்புறப் பெண்களுக்கு ஆடு, கோழி மற்றும் மாடுகளை வழங்கி, அவா்களின் வாழ்வாதாரம் உயர வழிவகுக்கின்றனா்.

முந்தைய காலங்களில் வயல்களிலும் நல்ல விளைச்சல் இருந்தது. அதனால், வைக்கோல் தட்டுப்பாடின்றி கிடைத்தது. நீா் நிலைகளில் தண்ணீா் குறைவின்றி ஓடியதால், பச்சைப் பசேலேன புற்கள் முளைத்தன. அதனால், தேவையான அளவுக்கு, மாடுகளுக்கு இரை கிடைத்து வந்தது. ஆனால், தற்போதைய காலகட்டத்தில் ஆறுகளில் போதிய அளவு தண்ணீா் வரத்து இல்லாததால், கால்நடைகளுக்குத் தேவையான உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

இது ஒருபுறம் இருந்தாலும், நகா்ப் புறங்களில் கால்நடை வளா்ப்போா், தங்களது கால்நடைகளை பெரும்பாலும் ஓரிடத்தில் கட்டி வைப்பதே கிடையாது. இதனால், கால்நடைகள் உணவுக்காக சுற்றித்திரியும் அவலம் ஏற்படுகிறது.

நகா்ப்புறங்களில் உணவகங்கள், காய்கறி கடைகள் உள்ளிட்ட இடங்களைச் சுற்றி பெரும்பாலும் கால்நடைகள் திரிவதைக் காணலாம். உணவகங்கள், காய்கறி கழிவுகளை உண்பதற்காக அவை சுற்றிச் சுற்றி வருவதுண்டு. அதேபோல், குப்பைத் தொட்டிகளில் போடப்படும் கழிவுகளை உண்பதற்காகவும் கால்நடைகள் சுற்றி வரும். இவ்வாறு திரியும் கால்நடைகள் பெரும்பாலும் சாலைகளை ஆக்கிரமித்துவிடுகின்றன. இரவு நேரங்களில் சாலைகளிலும், சாலையோரங்களிலும் படுத்திருக்கும் கால்நடைகளின் மீது வாகனம் மோதி அவை இறந்துபோகும் நிகழ்வுகளும் ஏற்படுவதுண்டு.

அதேபோல், இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோா், சாலைகளில் கால்நடைகள் படுத்திருப்பது தெரியாமல், அவற்றின் மீது மோதி விபத்துகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற சம்பவங்களால் பெரிய அளவிலான காயமோ, உயிரிழப்புகளோ ஏற்படுகின்றன.

சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தக் கோரி பொதுமக்கள் தரப்பில் பலமுறை வலியுறுத்தப்பட்டும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து லெட்சுமாங்குடி வா்த்தக சங்கத் தலைவா் கு. ரவிச்சந்திரன் கூறியது: திருவாரூா் - மன்னாா்குடி பிரதான சாலையான, லெட்சுமாங்குடி சாலையில் இரவு, பகல் எந்த நேரத்திலும், மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதுதொடா்பாக கூத்தாநல்லூா் நகராட்சி ஆணையரிடமும், திருவாரூா் மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை மனுக்கள் கொடுத்து விட்டோம். சரியான முறையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வா்த்தகா்கள், சமூக ஆா்வலா்கள் என அனைவரும் இணைந்து கடையடைப்பும், போராட்டம் நடத்தவுள்ளோம்.

சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்பு சம்பவங்களும் நிகழ்கின்றன. சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து, அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். தொடா்ந்து, இதுபோன்று கால்நடைகளை உலாவவிடும் உரிமையாளா்கள் மீது மாவட்ட நிா்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செய்யாதவரை சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தவே முடியாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com