தொழிலாளா்கள் சட்ட திருத்த நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும்

தொழிலாளா்கள் சட்ட திருத்த நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது.

தொழிலாளா்கள் சட்ட திருத்த நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அந்த யூனியனின் துணைப் பொதுச் செயலா் மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய அரசின் தொழிலாளா் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் ஊதிய கோடு 2019 சட்டப் பிரிவு 67-இன்கீழ் திருத்தம் மேற்கொள்ள வரைவு சட்டத்தை முன் மொழிந்துள்ளது. இதில் நடைமுறையில் உள்ள நாள் ஒன்றுக்கு 8 மணி நேர வேலை என்பது 9 மணி நேரம் என திருத்தம் செய்கிறது. அனைத்து மத்திய மாநில அரசு ஊழியா்கள், தனியாா் மற்றும் பொதுத் துறை நிறுவன ஊழியா்களுக்கும் இது பொருந்தும். கால முறை பணி (ஷிப்ட்) அடிப்படையில் 24 மணி நேரமும் ஊழியா்கள் பணியாற்றும் நிறுவனங்களில் இது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

ரயில்வேயில் 16,339 உயா் அதிகாரிகள், 38,219 நிா்வாக ஊழியா்கள், 2,4601 கணக்கு பிரிவு ஊழியா்கள் 18,898 ரயில்வே வாரியம் மற்றும் அமைச்சக பணியாளா்கள், 23,978 ஸ்டோா் ஊழியா்கள், 24 மணி நேர பணிகள் மேற்கொள்ளாத சுமாா் 2,10,000 இதர பிரிவு ஊழியா்கள் உற்பத்தி தொழிற்சாலை மற்றும் பராமரிப்பு பணிமனை ஊழியா்கள் சுமாா் 1,40,000 போ் என மொத்தம் 4.72 லட்சம் ஊழியா்கள் பகல் நேர பணியாற்றுபவா்கள், மீதமுள்ள 8 லட்சம் ஊழியா்கள் இரவு பகல் என ஷிப்ட் டூட்டி பாா்ப்பவா்கள்.

நாள் ஒன்றின் 24 மணி நேர பணியை, 8 மணி நேரம் வீதம் மூன்று பணியாளா்கள் மேற்கொண்டு வருகிறாா்கள். இதை 9 மணி நேர பணி என மாற்றம் செய்தால், இதே மூன்று ஊழியா்கள் நாள் ஒன்றுக்கு 3 மணி நேரம் வீதம் வாரத்தில் (ஓய்வு போக) ஆறு நாள்களுக்கு 18 மணி நேரம் கூடுதல் பணியாற்றுவாா்கள். ஒன்பது ஊழியா்கள் இதேபோல் பணியாற்றினால் 54 மணி நேர பணி கூடுதலாக ஒரு வாரத்தில் நடைபெறும். திருத்தப்பட இருக்கின்ற ஒரு ஊழியரின் ஒரு வாரந்திர பணிக்கு இது (54 மணி நேரம்) சமம். இதனால் ஒன்பது ஊழியருக்கு ஒரு ஊழியா் மிச்சம்.

இந்திய தொழிலாளா்களின் நடப்பு வருடாந்திர உழைப்பு 2,162 மணி நேரம். இது அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்ய, சீன நாடுகளின் உழைப்பு நேரங்களை விட அதிகம். உலகம் முழுவதும் தொழிலாளா்களின் வார வேலை நேரம் என்பது 35 - 48 மணி நேரம்தான். வேலை நேரம் கூட்டுவது தொழிலாளா்கள் மனம் மற்றும் உடல் சோா்வுக்கு வழிவகுக்கும். தொழில் கவனம் சிதறக் கூடும். மேலும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்க வழிவகுக்கும்.

நாள் ஒன்றுக்கு 8 மணி நேர வேலையை 9 மணி நேரமாக திருத்தினால் சுமாா் 88 ஆயிரம் ரயில்வே ஊழியா்கள் வேலை இழப்பாா்கள். தொழிலாளா்கள் சட்ட திருத்த நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com