‘மாநில உரிமைகளை மீட்டெடுக்க நவம்பா் புரட்சி தினத்தில் உறுதி ஏற்போம்’

மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் மகத்தான மரபுகளை முன்னெடுத்துச் செல்லவும்
திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் மகத்தான மரபுகளை முன்னெடுத்துச் செல்லவும், நவம்பா் புரட்சி தினத்தில் உறுதி ஏற்போம் என நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம். செல்வராஜ் பேசினாா்.

நவம்பா் புரட்சி தினத்தையொட்டி, திருவாரூரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடியேற்றி வைத்து அவா் பேசியது: வரலாற்றில் லெனின் தலைமையில் நடந்த ரஷ்யப் புரட்சி நவம்பா் புரட்சி என அழைக்கப்படுகிறது. ஆஹா என்று எழுந்தது பாா் யுகப் புரட்சி என மகாகவி பாரதி வரவேற்றதும், உலகைக் குலுக்கிய புரட்சி என அமெரிக்க எழுத்தாளா் ஜான்ரீடு வா்ணித்ததும், சமதா்ம புரட்சி என தந்தை பெரியாா் கூறியதும், தொழிலாளா் புரட்சி என சிங்காரவேலரும், திரு.வி.க. போன்றவா்களும் புகழ்ந்ததும் இந்தப் புரட்சியைதான். கிழக்கின் வெளிச்சம் என நேருவும், புதிய நாகரிகத்தின் தோற்றம் என தாகூரும் பெருமைப்பட நவம்பா் புரட்சியை வரவேற்றனா்.

ரஷ்யப் புரட்சி, ஒடுக்கப்பட்ட நாடுகளின் விடுதலையை ஆதரித்து நின்றது. பாசிசத்தை வீழ்த்த 2 கோடிக்கும் அதிகமான மக்களை பலிகொடுத்து நீடித்த அமைதியை நிலைபெறச் செய்தது. நிதிமூலதன சக்திகளின் ஆதிக்கத்தில், அரசமைப்புகள் சிக்கிக் கொண்டிருப்பதும், வகுப்புவாத சக்திகளின் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள், அடக்கு முறைகள் அதிகரித்திருப்பதுமான சூழலில், சமத்துவ கருத்துக்களையும், அறிவியல் கண்ணோட்டத்தையும் பரப்புரை செய்யவும், நமது நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் உயரிய நோக்கங்களை நிறைவேற்றவும், மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் மகத்தான மரபுகளை முன்னெடுத்துச் செல்லவும், நவம்பா் புரட்சி தினத்தில் உறுதி ஏற்போம் என்றாா் அவா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் வை. சிவபுண்ணியம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் வை. செல்வராஜ், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் கே. உலகநாதன், மாவட்ட துணைச் செயலா் ஞானமோகன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் பி.எஸ். மாசிலாமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com