பயிர்க் காப்பீடு கணக்கெடுப்பில் குளறுபடி: விவசாயிகள் தவிப்பு

இயற்கை சீற்றங்கள், நோய்த் தாக்குதல், பருவநிலை மாறுபாடு காரணங்களால்  தங்களின் விளைபொருள்கள் சேதமடைந்து
பயிர்க் காப்பீடு கணக்கெடுப்பில் குளறுபடி: விவசாயிகள் தவிப்பு

இயற்கை சீற்றங்கள், நோய்த் தாக்குதல், பருவநிலை மாறுபாடு காரணங்களால்  தங்களின் விளைபொருள்கள் சேதமடைந்து வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் விவசாயிகளுக்கு வரமாக இருந்த பயிர்க் காப்பீடுத் திட்டம், இன்று கணக்கெடுப்பு குளறுபடிகள், சரியான திட்டமிடல் இல்லாதது போன்ற காரணங்களால், அது சாபமாக மாறிவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
வறட்சி, வெள்ளம், புயல், பூச்சி, நோய்த் தாக்குதல் மற்றும் சுற்றுச்சூழல் மாறுபாடுகளால் விவசாயிகளின் விளைபயிர்கள் எதிர்பாராத இழப்பை சந்தித்தால், விவசாயிகளை இழப்பிலிருந்து ஓரளவாவது காப்பாற்ற வேண்டும் எனும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட  திட்டம்தான் வேளாண் பயிர்க் காப்பீடுத் திட்டம். இத்திட்டம் 1990-களில் தொடங்கப்பட்டது. அரசின் பெரும் முயிற்சியினாலும், விளம்பரங்களாலும் திட்டம் விவசாயிகளிடம் பெருமளவில் கொண்டு சேர்க்கப்பட்டு, தற்போது மிகவேகமாக செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாகத்தான் இத்திட்டத்தில் விவசாயிகள் சேர்ந்து, காப்பீடுத் தொகையை செலுத்தி, தங்களின் பயிர்களை காப்பீடு செய்து வருகின்றனர். ஒவ்வொரு பயிருக்கும், ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக அறிவிப்புகள் செய்யப்பட்டு அதனடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக, டெல்டா மாவட்டங்களில் நெல், உளுந்து, நிலக்கடலை, பருத்தி முதலிய பயிர்களுக்கு மட்டுமே பயிர்க் காப்பீடு செய்யப்படுகிறது. ஆனால், தோட்டக்கலைப் பயிர்களான வாழை, மரவள்ளி, முதலிய பயிர்கள் மழை, வெள்ளம், சூறைக்காற்று, புயல் ஆகியவற்றால் எளிதில் அழிவுக்கு உள்ளாகும் பயிர்களாக இருந்தாலும், டெல்டா மாவட்டங்களில் இப்பயிர்களுக்கு காப்பீடு கிடைப்பது குறித்து இன்னும் அறிவிக்கை செய்யவில்லை. இதனால், விவசாயிகள் இழப்பீடு பெற முடியாமல் தவிக்கின்றனர். இதேபோல், தென்னைக்கு பயிர்க் காப்பீடு செய்வதிலும், தென்னை வளர்ச்சி வாரியத்தின் மூலம் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு மட்டும் பயன்பெற முடியும். பிற பயிர்கள்போல் தென்னைக்கும் நேரடியாக காப்பீடு செய்யும் திட்டம் கொண்டுவரப்பட்டால்தான் அனைத்து தென்னை விவசாயிகளுக்கும் நன்மை கிடைக்கும்.
காப்பீடு செய்யப்பட்ட பயிர் சேதமடைந்தால் இழப்பீடு கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளுக்கு இருப்பது யதார்த்தமானது. ஆனால், இந்த இழப்பீட்டை அளவீடு செய்வதில் உள்ள நடைமுறை சிக்கல்களினால் விவசாயிகள் பெரும் அவதிக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகின்றனர்.
ஒரே ஊராட்சியில் பல வருவாய் கிராமங்கள் இருக்கும். அப்படி உள்ள வருவாய் கிராமங்களில் ஒவ்வொரு கிராமத்துக்கும் வெவ்வேறு இழப்பீட்டுத் தொகை கிடைக்கும்போது, குறைவாக கிடைக்கும் விவசாயிகள், தங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை கிடைக்காமல் ஏமாற்றம் அடைகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பிக்கு அவரவர் வருவாய்க் கிராம கணக்கின்படி இழப்பீடு வழங்கப்படும்போது வேறுபாடுகள் உண்டாகின்றன. சில சமயங்களில் இடையில் ஒரேயொரு வரப்பு மட்டும் பிரிக்கும் இரண்டு கிராமங்களில் ஒன்றுக்கு அதிகமாகவும், மற்றொரு கிராமத்துக்கு இழப்பீடு இல்லாதுபோகும் நிலையும்  உண்டாகிறது. இதுபோன்ற குளறுபடிகளுக்கு முக்கிய காரணம் கணக்கீடு முறைதான்.
மனித உயிர்க் காப்பீடு மற்றும் வாகன காப்பீடு போன்று, ஒவ்வொரு தனி நிகழ்வுக்கும் காப்பீடு செய்வது பயிர்க் காப்பீட்டில் சாத்தியம் இல்லை என்பதால், ஒவ்வொரு வருவாய்க் கிராமத்திலும் மாதிரி தளைகளை (கதிர்களை) அறுவடை செய்து பார்த்து, மகசூலின் அடிப்படையில் அந்த வருவாய் கிராமத்துக்கு இழப்பீடு உண்டா? இல்லையா? என முடிவு செய்யப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் காப்பீடு மாதிரி அலகாக வருவாய் வட்டங்கள் இருந்தன. அப்போது ஒரு பிர்க்காவுக்கு இழப்பீடு கிடைத்தாலும், மற்றொரு பிர்க்காவுக்கு இழப்பீடு இல்லாமல்போனாதாலும் விவசாயிகள் பாதிப்படைந்தனர். இழப்பீட்டை கணக்கீடு செய்வதில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதால், வருவாய் பிர்க்காவுக்கு பதிலாக வருவாய் கிராமங்கள் அடிப்படை அலகுகளாக மாற்றப்பட்டன.
ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் இரண்டு அறுவடை பரிசோதனைகள் நடத்தப்பட்டு, அவற்றில் கிடைக்கும் மகசூலின் அடிப்படையில் அந்த வருவாய் கிராமத்துக்கு சராசரி மகசூல் நிர்ணயிக்கப்படுகிறது. அறுவடை தளைகளை யாரும் தங்கள் விருப்பத்துக்குத் தேர்வு செய்ய முடியாது. தேசிய மாதிரி அளவீட்டு நிறுவனமான என்.எஸ்.எஸ்.ஓ. என்ற தன்னாட்சி நிறுவனத்தினரால் வழங்கப்படும் உத்தேசமான எண்களின் அடிப்படையில் கணக்கீடுகள் செய்யப்பட்டு,  தளைகள் தேர்வு செய்யப்படுகின்றன.
இவ்வாறு தேர்வு செய்யப்படும் தளைகளின் விளைச்சலைப் பொருத்துதான் அந்த ஒட்டுமொத்த வருவாய்க் கிராமத்தின் மகசூலும் நிர்ணயம் செய்யப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் மாதிரி தளைகளின் மகசூல், அந்த கிராமத்தின் யதார்த்த விளைச்சல் நிலைமையைப் பிரதிபலிப்பதில்லை. இதுபோன்ற காரணங்களால் கூடுதல் விளைச்சல் பெற்ற  கிராமங்களுக்கு காப்பீடு கிடைத்தும், இழப்பை சந்தித்த கிராமங்களுக்கு இழப்பீடு கிடைக்கால்போவதும் நடக்கிறது.
கடந்த 2018-2019 -ஆம் ஆண்டு (நவம்பர் மாதம்) வீசிய கஜா புயலின் சீற்றத்தால் பெரும்பாலான சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்து, மிக குறைந்த மகசூலே கிடைத்தது. இழப்பு அனைவரும் சராசரியாக ஏற்பட்டது. ஆனால், இழப்பீடு வேறுபாடாக உள்ளது. சில கிராமங்களுக்கு முற்றிலும் இழப்பீடு வழங்கப்படாமல் உள்ளது. இன்னும் சில கிராமங்களில் காப்பீடுபெறும் பட்டியலிலேயே  இடம்பெறாமல் உள்ளது.
இதற்குக் காரணமாக சொல்லப்படுவது கணக்கீடு முறைதான். ஒரு வருவாய்க் கிராமத்தின் சராசரி மகசூல், அந்த கிராமத்தின் முந்தைய மூன்று ஆண்டுகளின் சராசரி மகசூலுடன் எத்தனை சதவீதம் வேறுபடுகிறதோ அதற்கு தகுந்த இழப்பீடு வழங்குவதாக காப்பீடு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனமான தேசிய பயிர்க் காப்பீட்டுக் கழகம் இந்த காப்பீடுத் திட்டத்தை செயல்படுத்தியபோது, இயற்கை பேரிடர்களால் பயிர்கள் அழியும்போது அதற்கு சிறப்பு கவனம் செலுத்தி இழப்பீடு வழங்கியது.
உதாரணமாக, கடந்த 2005 -ஆம் ஆண்டு வெள்ளத்தின்போது பயிர்கள் அழிந்த  நிலையில், காப்பீடுத் தொகை பெறப்பட்டு இழப்பீட்டுத் தொகை வழங்கியது. ஆனால், தற்போது காப்பீட்டு நிறுவனங்கள் தனியார் வசம் உள்ளதால், வணிக நோக்கில் மட்டுமே கணக்கீடு செய்து இழப்பீடு வழங்கப்படுகிறது.
வணிக சிந்தனையுடன் செயல்படும் காப்பீட்டு நிறுவனத்திடம் தர்ம சிந்தனையை எதிர்பார்க்க முடியாது. விவசாயிகளின் மீது கருணைக் கொண்டு காப்பீட்டுத் தொகையை 98 சதவீதம் மத்திய, மாநில அரசுகளே செலுத்துவதுபோல், இழப்பீட்டுத் தொகை அனைவருக்கும் கிடைக்க ஆவன செய்ய வேண்டும். குறிப்பாக, இயற்கை பேரிடர் காலங்களில் இழப்பு அனைவருக்கும் ஏற்படுகிறது. இதில் எக்காரணத்தைக் கொண்டும் பாகுபாடு வரக்கூடாது என்ற பொது விதியின் அடிப்படையில் அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடம் மேலோங்கியுள்ளது. அதற்காக அரசு, பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து இழப்பீடு வழங்கி விடுபட்ட விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும். 
பயிர்க் காப்பீடு என்பது விவசாயிகளுக்கு துணையாக இருந்து வேளாண் உற்பத்தியை அதிகப்படுத்தி, விளைநிலங்களைப் பாதுகாக்கும் வரமாக இருக்க வேண்டும். மாறாக வர்த்தக நோக்குடனும், லாப நோக்குடனும் செயல்பட்டால் அத்திட்டம் சாபமாக 
மாறிவிடும் என்பதே விவசாயிகளின் ஒட்டுமொத்த கருத்தாகும்.

பாதிப்பின் சதவீதம் தெரியவில்லை
இதுகுறித்து தமிழ் மாநில விவசாயிகள் சங்க கோட்டூர் ஒன்றியச் 
செயலர் பி. பரந்தாமன் கூறியது: பழைய காப்பீட்டு முறையில், காப்பீட்டுத் துறை, வேளாண்மைத் துறை, புள்ளியியல் துறை ஆகியவற்றை சேர்ந்த அலுவலர்கள் ஒரு வருவாய்க் கிராமத்துக்கு வந்து சர்வே எண்களை குலுக்கல் முறையில், ஐந்து எண்களை எடுத்து அந்த சர்வே எண்ணில் உள்ள வயலில் அறுவடையின்போது கிடைக்கும் பயிரின் அளவைக் கொண்டு சதவீதம் கணக்கீடு செய்வர். பின்னர், அதனடிப்படையில் காப்பீடுத் தொகை அறிவிப்பு செய்யப்படும். ஆனால், தற்போது சாட்டிலைட் மூலம் சர்வே எண்கள் கண்டறியப்பட்டு, கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது. இதன்மூலம் ஆழ்துளைக் கிணறு சாகுபடி செய்யப்படும் வயல், பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகாத வயல்களின் சர்வே எண்ணும் அதில் இடம்பெறுவதால் பாதிப்பு முழுவதுமாக  கண்டறியப்படாததுடன், பாதிப்பின் சதவீதம் குறித்த தகவல் விவசாயிகளுக்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை.
இதுதொடர்பாக வேளாண்மைத் துறையினரிடம் கேட்டால், அவர்களும் தகவல் ஏதும் வரவில்லை என்றே சொல்கின்றனர். காப்பீட்டு நிறுவனம் பட்டியல் வெளியிட்ட பின்னர் தான் பாதிப்பின் சதவீதம் தெரியவருகிறது. புதிய திட்டத்தில் உள்ள ஒரே பயன், காப்பீடு பெறும் பட்டியலில் உள்ளவர்களுக்கு உரிய தொகை  உடனடியாக கிடைக்கிறது என்பது மட்டுமே என்றார் அவர்.

எப்போது கிடைக்கும் காப்பீடு?
இதுகுறித்து விவசாயிகள் மேலவாசல் இராம. அன்பழகன், வடுவூர் வடபாதி த. ராமமூர்த்தி, மகாதேவப்பட்டணம் சௌ. பன்னீர்செல்வம் 
ஆகியோர் கூறியது: கடந்த ஆண்டு வீசிய கஜா புயலின் காரணமாக, மன்னார்குடி பகுதியில் உள்ள கிராமங்கள்100 சதவீதம் பாதிப்புக்குள்ளாகின. சம்பந்தப்பட்ட துறையின் சார்பில் கணக்கெடுப்புப் பணிகள் செய்தனர். ஆனால், பாதிக்கப்பட்ட பகுதி குறித்த பட்டியலை காப்பீடு நிறுவனம் வெளியிட்டதில் மேலவாசல், மூவாநல்லூர், மகாதேவப்பட்டணம், அசேசம், வடுவூர் வடபாதி உள்ளிட்ட 10 -க்கும் மேற்பட்ட கிராமங்கள் முழுமையாக விடுபட்டுப்போனது. இதுகுறித்து காப்பீட்டு நிறுவனத்திலும், சம்பந்தப்பட்ட அரசுத் துறையிலும் முறையிட்டு எந்த பதிலும் இல்லை. அலைக்கழிப்பும், பரிதவிப்பும்தான் ஏற்பட்டது. இதுதொடர்பாக, மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தோம். அவரும் பாதிக்கப்பட்ட கிராமங்களிலிருந்து விவசாயப் பிரதிநிதிகளை சென்னைக்கு அழைத்துச் சென்று, காப்பீட்டு நிறுவன அதிகாரிகளை சந்தித்து, விவசாயிகளின் கோரிக்கைகளை  விளக்கினார். அவர்களும் பிரச்னைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
எப்போது காப்பீடுத் தொகை கிடைக்கும் எனத் தெரியவில்லை. இதனால், தற்போது சம்பா சாகுபடி செய்ய பணம் இல்லாமல் மிகுந்த  பாதிப்பில் உள்ளோம். பழைய காப்பீடு முறையை நவீனப்படுத்தி, பாதிக்கப்பட்ட விளைநிலங்களை விடியோ பதிவு  செய்து, காப்பீட்டுத் துறை மற்றும் அரசுத் துறையினர் முன்னிலையில் அதை ஆவணப்படுத்தி இழப்புக்குரிய  காப்பீடுத் தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com