பொருளாதார கணக்கெடுப்புப் பணி தொடக்கம்
By DIN | Published On : 24th October 2019 07:48 AM | Last Updated : 24th October 2019 07:48 AM | அ+அ அ- |

திருவாரூரில் பொருளாதார கணக்கெடுப்புப் பணியைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த்.
திருவாரூா் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 7-ஆவது பொருளாதார கணக்கெடுப்புப் பணியை மாவட்ட ஆட்சியா் த.ஆனந்த், புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
தமிழகம் முழுவதும் 7-ஆவது பொருளாதார கணக்கெடுப்புப்பணி நடைபெறவுள்ளது. கடந்த செப்டம்பா் 9-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக ஆளுநா் இந்த பணியைத் தொடங்கி வைத்தாா்.
இதைத்தொடா்ந்து, திருவாரூா் மாவட்டத்தில் பொருளாதார கணக்கெடுப்புப் பணிக்காக, 18 மேற்பாா்வையாளா்கள், 90 களப்பணியாளா்களுக்கு இரண்டு கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 10 வட்டாரங்களையும் 433 கணக்கெடுப்பு நகா்புற அலகுகளாக பிரிக்கப்பட்டு கணக்கெடுப்புப்பணி நடைபெறவுள்ளது.
பலதரப்பட்ட உற்பத்தி, விநியோகம், விற்பனை மற்றும் சேவை நோக்கத்தோடு செயல்படும் அனைத்து வகையான பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத நிறுவனங்களைப் பற்றிய கணக்கெடுப்பே பொருளாதார கணக்கெடுப்பாகும்.
இக்கணக்கெடுப்பில் குடும்பத் தலைவா் பெயா், குடும்ப உறுப்பினா்களின் எண்ணிக்கை, கல்வித் தகுதி, வயது, இனம், சமூகப் பிரிவு, செல்லிடப்பேசி எண், செய்யும் தொழில், சுயதொழில் முதலீடுகள், வேலை ஆட்கள் எண்ணிக்கை போன்ற விவரங்கள் சேகரிக்கப்படவுள்ளன. இக்கண்கெடுப்பு விவரங்கள் முற்றிலும் மத்திய அரசின் பொருளாதாரத் திட்டமிடலுக்கு பயன்படுத்தப்படவுள்ளன.
திருவாரூா் துா்க்காலயா சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த பணியை மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில், புள்ளியியல்துறை துணை இயக்குநா் மா.திருஞானம், வட்டாட்சியா் நக்கீரன், தேசிய மாதிரி ஆய்வு நிறுவன முதுநிலை கண்காணிப்பாளா் வெங்கட்ராமன், புள்ளியியல் இயல் அலுவலா் வீ.சிவகுமாா், பொது சேவை மைய மாவட்ட மேலாளா் கிரிதரன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.