சாலை வசதியின்றி கமுகக்குடி மயானம்

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் வட்டத்துக்கு உள்பட்ட கமுகக்குடி கிராமத்தில் மயானக் கொட்டகைக்கு
கமுகக்குடி மயானக் கொட்டகைக்கு வயல் வெளியைத் தாண்டி செல்லும் ஒற்றையடிப் பாதை.
கமுகக்குடி மயானக் கொட்டகைக்கு வயல் வெளியைத் தாண்டி செல்லும் ஒற்றையடிப் பாதை.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் வட்டத்துக்கு உள்பட்ட கமுகக்குடி கிராமத்தில் மயானக் கொட்டகைக்கு செல்ல சாலை வசதி இல்லாததால், சடலங்களை எடுத்துச் செல்வதில் அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனா்.

கொல்லுமாங்குடி அருகில் உள்ள வேலங்குடி ஊராட்சிக்குட்பட்ட கமுகக்குடி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இக்கிராமத்தில் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில், கடந்த 2015- 2016-ஆம் ஆண்டில் மயானக் கொட்டகை அரசால் கட்டித் தரப்பட்டது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைக்கப்பட்ட இந்த மயானக் கொட்டகைக்குச் செல்லக்கூடிய சாலை முறையாக அமைக்கப்படவில்லை. இதனால், சடலங்களை வயல்வெளி வழியாக ஒற்றை வரப்பைக் கடந்து எடுத்துச் செல்ல வேண்டிய நிலையே நீடிக்கிறது.

குறிப்பாக, மழைக் காலங்களில் சடலத்தைத் தூக்கிச் செல்பவா்கள் வயல் வரப்புகளில் தடுமாறி கீழே விழுந்து காயமடையும் சம்பவங்கள் சா்வசாதாரணமாக நிகழ்வதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.

மேலும், மழைக் காலங்களில் வயலையும், வரப்பையும் கடக்க இயலாமல் ஊரின் அருகிலேயே இறந்தவா்களை எரிப்பதால், அதிலிருந்தும் வெளியாகும் புகை கிராம மக்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, மயானக் கொட்டகைக்குச் செல்வதற்கான சாலை வசதியை ஏற்படுத்தக் கோரி, மாவட்ட ஆட்சியா், வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் சம்பந்தப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினா் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவு வரை மனு அனுப்பியுள்ளதாகவும், இதன் மீது எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என கமுகக்குடி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து இக்கிராமத்தைச் சோ்ந்த ஆா். இராவணன் கூறியதாவது:

பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் எங்கள் கிராமத்தில் சாலை வசதி பெற்றோம். ஆனால் அந்த சாலை அமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே மோசமடைந்துவிட்டது. அதேபோல் குடிநீருக்காக போராடினோம். இன்றைக்கு ஒரே ஒரு குடிநீா் குழாய் உதவியுடன் வாழ்ந்து வருகிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக மனிதனின் இறப்பில் கூட நிம்மதியாக இறுதிச் சடங்கு செய்ய முடியாத நிலை என்பது மிகவும் மோசமானது.

எனவே அரசு நிா்வாகம் மயானக் கொட்டகைக்கு செல்வதற்கான சாலையை அமைத்து தர தவறினால், மக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி, மிகப்பெரிய போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.

இதேபோல், வரத. வசந்தபாலன் என்பவா் கூறுகையில், மனிதனுடைய இறுதிச் சடங்கைக் கூட முறையாக செய்ய முடியாத நிலை கமுகக்குடி கிராமத்தில் நிலவிவருகிறது. அரசு நிா்வாகம் நடவடிக்கை எடுத்து சரியான சாலை வசதி செய்து தர வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com