டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய அரசை தமிழக அரசு

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 
மன்னார்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவை தொகுதி காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சியின் அகில இந்திய தலைவராக பொறுப்பேற்றுள்ள சோனியாகாந்திக்கு வாழ்த்து தெரிவிப்பது, அக்டோபர் 2-ஆம் தேதி காந்தியின் 150-ஆவது பிறந்தநாள் நிறைவு விழாவையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் நகரம் முதல் குக்கிராமம் வரை மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்குவது, காந்தியின் சிந்தனைகளை மக்களிடம்  கொண்டு செல்லும் வகையில் வட்டாரம் தோறும் பாத யாத்திரை பிரசாரம் செய்வது, தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து பணியினை உடனடியாக தொடங்க வலியுறுத்துவது, நேரு அளித்துள்ள மொழிக்கொள்கை உறுதி மொழியின் படி, ஹிந்தி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும், உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கு நிபந்தனையின்றி கல்விக் கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்டோர் மீது அரசியல் காரணங்களால் எடுக்கப்பட்டுள்ள கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர்களாக,அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலர் ஸ்ரீவல்ல பிரசாத், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலர் கீழானூர் ராஜேந்திரன், செய்தி தொடர்பாளர் திருச்சி ஆர். வேலுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், காங்கிரஸ் நகரத் தலைவர் ஆர். கனகவேல், முன்னாள் மாவட்டத் தலைவர் ஆர்.வி. ராஜகோபால், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஆர்.பி. மோகன், ஜி. குணசேகரன்,  மாவட்ட பொதுச் செயலர் வீரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
முன்னதாக, கஜா புயல் காரணமாக உயிரிழந்த மன்னார்குடி அருகேயுள்ள பைங்காட்டூர் கோவிந்தன் மனைவி பானுமதி மற்றும் தென்பாதி மகாலிங்கம் மனைவி பாக்கியம் ஆகிய இரு பெண்களின் குடும்பத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தலா ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலையை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலர் வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com