மந்த கதியில் பாலம் கட்டுமானப் பணி: விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தல்

சீர்காழியை அடுத்த புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் மந்தகதியில் நடைபெற்று வரும் பாலம் கட்டுமான பணிகளால், நாள்தோறும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. 


சீர்காழியை அடுத்த புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் மந்தகதியில் நடைபெற்று வரும் பாலம் கட்டுமான பணிகளால், நாள்தோறும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. 
சீர்காழி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் புத்தூர் பகுதியில், பழையபாளையத்தான் பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த பாசன வாய்க்காலின் குறுக்கே உள்ள பழைய பாலம் குறுகியதாக இருந்ததால், புதிய சிறு பாலம் (கல்வெர்ட்) அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நடைபெற்று வருகிறது. சென்னை, கடலூர், புதுச்சேரி, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சீர்காழி, மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சீர்காழி- சிதம்பரம் பிரதான தவிர்க்க முடியாத தேசிய நெடுஞ்சாலையாக இருப்பதால், அனைத்து வாகனங்களும் புத்தூர் பகுதியைக் கடந்துதான் மேற்கண்ட பகுதிகளுக்கு 
செல்ல முடியும்.
முக்கியத்துவமான இந்த தேசிய நெடுஞ்சாலையில், பாலம் கட்டுமானப் பணி ஆமைவேகத்தில் நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பாலம் இருபகுதியாக பிரிக்கப்பட்டு ஒரு பகுதியில் போக்குவரத்தும், மறுபகுதியில் பாலம் கட்டுமானப் பணிகளும் நடைபெறுகின்றன. இதில் ஒரு பாதி பாலம் பணி நிறைவடைந்துவிட்ட போதிலும், பாலம் கட்டுமானப் பகுதி சீர்காழி- சிதம்பரம்- பழையார் பகுதிக்கு சாலைகள் சந்திக்கும் மூன்று சாலை சந்திப்பாகவும் உள்ளது.
இதனால், போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டால் இருபுறமும் சுமார் 1கிமீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த அனுபவமிக்க போக்குவரத்து காவலர்களை நியமிக்காமல், ஊர்க்காவல் படையினரை கொள்ளிடம் போலீஸார் பணியமர்த்துகின்றனர். போலீஸார் பணியில் இருக்கும்போதே போக்குவரத்து நெருக்கடி தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
இதுகுறித்து இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் சிஆர். பாண்டியன் கூறியது:
சீர்காழி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் பாலப் பணிகள் அவ்வளவு திருப்திகரமாக நடைபெறவில்லை. பிரதான பகுதியாக இருப்பதால், இப்பகுதியில் ஒரு மணிநேரத்தில் 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன. தற்போது பாலப் பணிகளால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பல மணி நேரம் வாகனங்கள் வரிசையாக காத்திருந்து விழிப்பிதுங்கி செல்கின்றனர்.
மேலும், இந்த பகுதியில் புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரி, புத்தூர் அரசுக் கலைக் கல்லூரி ஆகியவை இருப்பதால், கல்லூரி நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி கடும் சிரமத்தை தருகிறது. ஆகையால்  பாலம் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com