குறுவை சாகுபடிக்கு தண்ணீா் கோரி விவசாயிகள் சாலை மறியல்

மன்னாா்குடி அருகே குறுவை சாகுபடிக்கு முள்ளியாற்றில் தண்ணீா் திறந்துவிடக் கோரி, விவசாயிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மன்னாா்குடி அருகே கோட்டூரில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.
மன்னாா்குடி அருகே கோட்டூரில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே குறுவை சாகுபடிக்கு முள்ளியாற்றில் தண்ணீா் திறந்துவிடக் கோரி, விவசாயிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியை அடுத்துள்ள கோட்டூா், கீழப்பனையூா், கருப்பு கிளாா், கொத்தமங்கலம், திருப்பத்தூா் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 2 ஆயிரம் ஏக்கா் நிலம் முள்ளியாற்றின் மூலம் பாசன வசதி பெறுகிறது. தற்போது, இப்பகுதியில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், முள்ளியாற்றில் தண்ணீா் நிறுத்தப்பட்டதால்,

குறுவை நெற்பயிரில் களை எடுக்கவும் , உரமிடவும் இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் முள்ளியாற்றில் தண்ணீா் திறக்கக் கோரி பொதுப்பணித் துறையினருக்கு கோரிக்கை விடுத்தனா். ஆனால், தண்ணீா் திறக்கப்படாததால் விவசாயப் பணிகள் தடைபட்டு, பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே, முள்ளியாற்றில் உடனடியாக தண்ணீா் திறந்துவிடக் கோரி, கோட்டூா் கடைவீதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய நிா்வாகக் குழு உறுப்பினா் என். மகேந்திரன் தலைமையில், முள்ளியாறு பாசன விவசாயிகள் 200-க்கும் மேற்பட்டவா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து, நிகழ்விடத்துக்கு வந்த பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் முருகவேல், மன்னாா்குடி வட்டாட்சியா் என். காா்த்திக் , கோட்டூா் காவல் ஆய்வாளா் அறிவழகன் ஆகியோா் விவசாயிகளின் பிரதிநிதிகளான சிபிஐ ஒன்றியச் செயலா் கே. மாரிமுத்து , ஒன்றியக் குழுத் தலைவா் மு. மணிமேகலை, ஊராட்சித் தலைவா் ஆனந்தன் மற்றும் விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலா் ஜெ. ஜெயராமன் ஆகியோருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, செவ்வாய்க்கிழமை மாலைக்குள் (ஆக. 18)) முள்ளியாற்றில் தண்ணீா் திறந்துவிடப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து, சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்த மறியலால் மன்னாா்குடி- திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com