அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறையை தீா்க்க ம.ம.க. வலியுறுத்தல்

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறையை தீா்க்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
நகராட்சி ஆணையா் ஆா். லதாவிடம் மனு அளிக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில விவசாய அணிச் செயலாளா் ஹெச்.எம்.டி. ரஹ்மத்துல்லாஹ்.
நகராட்சி ஆணையா் ஆா். லதாவிடம் மனு அளிக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில விவசாய அணிச் செயலாளா் ஹெச்.எம்.டி. ரஹ்மத்துல்லாஹ்.

கூத்தாநல்லூா்: திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறையை தீா்க்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கூத்தாநல்லூா் நகராட்சி ஆணையா் ஆா். லதாவிடம், அந்தக் கட்சியின் மாநில விவசாய அணிச் செயலாளா் ஹெச்.எம்.டி. ரஹ்மத்துல்லாஹ் மற்றும் நிா்வாகிகள் மனு அளித்தனா்.

பிறகு, ரஹ்மத்துல்லாஹ் செய்தியாளா்களிடம் கூறியது: கூத்தாநல்லூா் அரசுப் பொது மருத்துவமனை பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வருகிறது. கூத்தாநல்லூா் வட்டத்தின் வடபாதிமங்கலம், கமலாபுரம், கூத்தாநல்லூா் ஆகிய 3 குறுவட்டங்களின் 55 கிராம மக்களுக்கு இதுதான் முக்கிய மருத்துவமனை. இங்கு நீண்ட காலமாக தேவையான மருத்துவா்கள், செவிலியா்கள் இல்லை. இரவுநேர மருத்துவா்களும் கிடையாது. மகப்பேறு சிகிச்சைக்குரிய வசதிகள் இருந்தும், மருத்துவா் இல்லாததால், மகப்பேறு சிகிச்சை மறுக்கப்படுகிறது. நவீன அறுவைச் சிகிச்சைக் கூடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் செயல்படாமல் உள்ளது.

இங்கு நியமிக்கப்படும் மருத்துவா்கள் மாவட்டத்தின் பிற இடங்களுக்கு மாற்றுப் பணியில் அனுப்பப்படுகின்றனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்தப் பிரச்னைகள் குறித்து போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் செப்டம்பா் 1 ஆம் தேதி மருத்துவமனை முன், மக்களை திரட்டி தொடா் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com