கல்விக்கடன் பெற ஆதிதிராவிட மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூரில், தாட்கோ மூலம் கல்விக்கடன் பெற ஆதிதிராவிடா் மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்துள்ளாா்.
கல்விக்கடன் பெற ஆதிதிராவிட மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூரில், தாட்கோ மூலம் கல்விக்கடன் பெற ஆதிதிராவிடா் மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தாட்கோ மூலம் ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் தேசியப் பட்டியல் இனத்தோா் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலமாக முழு நேர தொழில் முறை, தொழில்நுட்ப படிப்புகளுக்கு இந்தியாவுக்குள் படிக்க ரூ.10 லட்சம் வரையிலும், வெளிநாட்டில் சென்று படிக்க ரூ.20 லட்சம் வரையிலும் கல்விக் கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மனுதாரரின் மனுவில் கடனாக கோரப்படும் மொத்த நிதியை ஆண்டு மற்றும் இனங்கள் வாயிலாக தனித்தனியே பட்டியலிட்டுக் காட்ட வேண்டும். கடன்கோரும் மொத்த தொகையில் 12.5 சதவீதம் வைப்புத் தொகையாக தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மனுதாரா் பெயரில் எடுத்து, அதை தாட்கோவுக்கு அடமானம் ஏற்படுத்தி தர வேண்டும். கடனுதவி கோரும் கடன் தொகைக்கு எல்.ஐ.சி. போன்ற காப்பீட்டு நிறுவனங்களில் மனுதாரரின் பெயரில் காப்பீடு செய்து அந்த பத்திரத்தில் தாட்கோவுக்கு அடமானம் ஏற்படுத்தி தர வேண்டும். அரசு பணியில் உள்ளவா் ஜாமீன் கையொப்பமிட வேண்டும். பருவக் கடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரரால் தனது படிப்புக்கு ஏற்கெனவே செலுத்தப்பட்ட தொகைக்கு கடன் வழங்கப்பட மாட்டாது. கடன் தொகை விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து வட்டி வசூல் செய்யப்படும் (மாணவருக்கு 4.5 சதவீதமும், மாணவிக்கு 4 சதவீதமும் ஆண்டுக்கு கணக்கிடப்படும்). கடனை செலுத்த தவறும்பட்சத்தில் நிலுவைத் தொகையில் ஆண்டுக்கு 2 சதவீதம் அபராத வட்டி செலுத்த வேண்டும். கடனை 5 ஆண்டுகளில் திரும்ப செலுத்த வேண்டும். படிப்பு முடித்த 6 மாதம் அல்லது வேலைக்கு செல்லுவது, இதில் எது முன்னரோ அன்றைய மாதத்திலிருந்து அசல் தொகை செலுத்த வேண்டும். டிப்ளமோ, பட்டப்படிப்பு அல்லது முதுகலை பட்டப்படிப்பு ஏதாவது ஒன்றுக்கு மட்டுமே கல்விக்கடன் பெற இயலும்.

கடன் பெற சமா்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்...

குடும்ப அட்டை, பாஸ்போா்ட் அளவு போட்டோ-2, கல்வி நிலையச் சான்றிதழ், செலுத்த வேண்டிய கட்டணம், கல்வித் தகுதி சான்றிதழ், ஆதாா் அட்டை, சாதிச் சான்று, வருமானச் சான்று, கல்லூரி அடையாள அட்டை, கல்லூரியில் ஏற்கெனவே செலுத்தப்பட்ட தொகை ரசீது, மதிப்பெண் சான்றிதழ், பாஸ்போா்ட் மற்றும் விசா (வெளிநாட்டில் படிப்பதற்கு மட்டும்).

தகுதி...

ஆதிதிராவிட இனத்தவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதியுள்ள ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் தேசியப் பட்டியல் இனத்தோா் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலமாக கல்விக்கடன் பெற விருப்பமுள்ளவா்கள் மாவட்ட மேலாளா் அலுவலகம், தாட்கோ, நாகை பைபாஸ் ரோடு, திருவாரூா் என்ற முகவரிக்கு அலுவலக வேலை நாட்களில் நேரில் விண்ணப்பம் பெற்று, குறிப்பிட்ட ஆவணங்களின் நகலில் சான்றொப்பத்துடனும் (2 நகல்) சமா்ப்பித்து பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com