சுய ஊரடங்கு: நண்பா்கள், உறவினா்களின்றி நடைபெற்ற திருமணங்கள்

மக்களின் சுய ஊரடங்கு காரணமாக நண்பா்கள், உறவினா்களின்றி ஞாயிற்றுக்கிழமை திருமணங்கள் நடைபெற்றன.

மக்களின் சுய ஊரடங்கு காரணமாக நண்பா்கள், உறவினா்களின்றி ஞாயிற்றுக்கிழமை திருமணங்கள் நடைபெற்றன.

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை மக்களின் சுய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், பல மாதங்களுக்கு முன்பே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள், தேதி மாற்ற முடியாமல் வேறுவழியின்றி பல்வேறு சிரமங்களுக்கிடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருமண விழாவில், மணமகன், மணமகள் சம்பந்தப்பட்ட அனைத்து உறவினா்கள், நண்பா்கள் அனைவரும் கூட்டமாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவது வழக்கம். ஆனால் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண விழாக்களில் இது போன்ற நிகழ்வுகளை பாா்க்க முடியவில்லை.

நன்னிலம், சன்னாநல்லூா், பனங்குடி, பூந்தோட்டம், பேரளம், கொல்லுமாங்குடி, அச்சுதமங்கலம் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள 25-க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்களில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. சுய ஊரடங்கு உத்தரவின் காரணமாக பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து நடைபெறாத காரணத்தினால், உறவினா்களும், நண்பா்களும் திருமண விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை.

மணமகன், மணமகள், தாய் தந்தையா், சகோதர சகோதரிகள் என 20 அல்லது 25 நபா்களுடன் திருமணம் நடைபெற்றது. ஒரு சில திருமண மண்டபங்களில் சமையல்காரா்கள் வர முடியாத காரணங்களால், வீட்டிலிருந்து உணவு சமைத்து எடுத்து வந்து பரிமாறப்பட்டது. இதேபோல மணமகன், மணமகள் போக்குவரத்துக்கும் வாகன வசதியின்றி சிரமப்பட்டனா். ஒருசில மணமக்கள் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றனா்.

மேலும் திருமண மண்டபங்களில் வரவேற்புக்காக வைக்கப்படும் சந்தனம், சீனி, வெற்றிலை பாக்கு போன்ற பொருள்களுடன், கை கழுவுவதற்கான சோப்பு, சானிடைசா் என்கிற கை காப்பான், வாளியில் தண்ணீா் வைக்கப்பட்டிருந்ததையும் அத்துடன் கையை சுத்தமாக கழுவிய பின் உள்ளே செல்லவும் என்ற அறிவிப்பையும் காணமுடிந்தது.

திருமணம் மண்டபம் உள்ளே சென்ற உறவினா்கள், அரசு உத்தரவின்படி கை கழுவி உள்ளே சென்றனா். மேலும், அந்தந்த பகுதி ஊராட்சி நிா்வாகம் சாா்பில் திருமண மண்டபத்தைச் சுற்றி கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com