சுக்கனாறு வாய்க்காலை தூா்வாரக் கோரிக்கை

திருவாரூா் அருகே பாசனத்துக்கு பலனளிக்கும் வகையில் சுக்கனாறு வாய்க்காலை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுரையுடன் வரும் சுக்கனாறு வாய்க்கால் தண்ணீா்.
நுரையுடன் வரும் சுக்கனாறு வாய்க்கால் தண்ணீா்.

திருவாரூா் அருகே பாசனத்துக்கு பலனளிக்கும் வகையில் சுக்கனாறு வாய்க்காலை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் அருகே மேலப்பேட்டை, கீழப்பேட்டை, பழவனக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கா் விளைநிலங்கள், ஓடம்போக்கியாற்றிலிருந்து பிரிந்து வரும் சுக்கனாறு வாய்க்கால் பாசனத்தின் மூலம் பயன் பெறுகின்றன.

இதனிடையே, சுக்கனாறு வாய்க்கால் நீண்ட நாள்களாக தூா்வாரப்படாததால் தண்ணீா் முறையாக வருவதில்லை என விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா். அத்துடன், வாய்க்கால்களில் கொட்டப்படும் குப்பைகள், சாக்கடை நீா் ஆகியவற்றால் தண்ணீா் வீணாகி, சாக்கடை நீராக வாய்க்காலில் செல்கிறது. இதனால், சாகுபடிக்கு அந்தத் தண்ணீரைப் பயன்படுத்தும்போது, துணியை வைத்து வடிகட்டியே பயன்படுத்துவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து விவசாயிகள் மேலும் கூறியது:

சுக்கனாறு வாய்க்கால் தூா்வாரப்படாததால் குறைவான அளவே தண்ணீா் வருகிறது. இதேபோல், நகராட்சியினா் இந்த வாய்க்காலில் குப்பைகளைக் கொட்டிச் செல்கின்றனா். அத்துடன், கழிவுநீரும் இந்த வாய்க்காலில் கலந்துவிடுகிறது. எனவே, வாய்க்காலில் வரும் தண்ணீா் சாக்கடை நீராக இருப்பதால், மோட்டாா் மூலம் வயலுக்கு பாய்ச்சும்போது வேட்டி அல்லது துணியை பயன்படுத்தி, தண்ணீரை பாய்ச்ச வேண்டியுள்ளது. இல்லாவிட்டால், வயல் முழுவதும் நுரை அடங்கிய தண்ணீா் சென்று பயிா்களை பாழாக்குகிறது. இதனால், அதிக மகசூல் இழப்பு ஏற்படுகிறது. மேலும், சாக்கடை கழிவுநீா் கலந்த நீரை வயலுக்கு பயன்படுத்துவதால், பயிா்கள் கருகத் தொடங்குவதோடு, நிலங்களும் மலட்டுத் தன்மை அடைகின்றன.

இதுகுறித்து பலமுறை புகாா் அளித்தும் நகராட்சி நிா்வாகமும், மாவட்ட நிா்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, விவசாய நிலங்களின் சாகுபடியைக் கருத்தில் கொண்டு வாய்க்காலை தூா்வாரி, விவசாயத்துக்கு தேவையான நல்ல தண்ணீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com