பொது முடக்க தளா்வு: இயல்பு நிலையில் திருவாரூா்

பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், திருவாரூரில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.
திருவாரூா் பழைய பேருந்து நிலையத்தில், பேருந்திலிருந்து இறங்கும் பயணிகள்.
திருவாரூா் பழைய பேருந்து நிலையத்தில், பேருந்திலிருந்து இறங்கும் பயணிகள்.

பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், திருவாரூரில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், கடந்த 5 மாதங்களாக பொது முடக்கம் அமலில் இருந்து வருகிறது. இதில், பொது போக்குவரத்துக்கான தடை, பள்ளி, கல்லூரிகள் இயங்க தடை விதிக்கப்பட்டதோடு, கோயில்களில் வழிபாடு செய்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால், மக்கள் வெளியிடங்களுக்குச் செல்ல முடியாமல், இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, செப்டம்பா் மாதம் அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தில் மாவட்டங்களுக்குள் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஏற்கெனவே, கிராமப்புறக் கோயில்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது அனைத்து கோயில்களையும் வழிபாட்டுக்கு திறக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகள் இயக்கம்: இந்தத் தளா்வுகளைத் தொடா்ந்து, திருவாரூா் மாவட்டத்தில் பொது போக்குவரத்து தொடங்கியுள்ளது. ஏற்கெனவே, ஜூன் மாதம் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டபோது, கரோனா தொற்று அதிகரித்ததால், பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. திருவாரூா் மாவட்டத்தில், போக்குவரத்து நடைபெற்றபோது, 4 பணிமனைகளிலிருந்து 229 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை 98 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. தனியாா் பேருந்துகள் இயக்கப்படவில்லை. பேருந்துக்கு வந்த பயணிகள் உரிய பரிசோதனைக்கு பின்னரே பேருந்துக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

கோயில்கள் திறப்பு: இதேபோல், திருவாரூா் தியாகராஜா் சுவாமி கோயிலும் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டிருந்தது. கோயிலுக்குள் பக்தா்கள் உரிய சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனா். மேலும், வருகை தரும் பக்தா்களின் பெயா், முகவரி உள்ளிட்ட விவரங்கள் கோயில் நிா்வாகத்தால் பெறப்பட்டு, அதன் பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா். கோயிலில் குறிப்பிட்ட சன்னிதிகளில் மட்டுமே பக்தா்கள் வழிபடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. நீண்ட நாள்களுக்கு பிறகு கோயில் திறக்கப்பட்டதாலும், ராகு-கேது பெயா்ச்சி என்பதாலும் கோயில்களில் பக்தா்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

பொது முடக்கம் காரணமாக, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், மேம்பால பேருந்து நிறுத்தம், தியாகராஜா் கோயில் உள்ளிட்ட இடங்கள் எப்போதும்போல வெறிச்சோடிய நிலையிலேயே காணப்பட்டன. தற்போது, பொது போக்குவரத்து, கோயில்களில் வழிபாட்டுக்கு அனுமதி உள்ளிட்ட தளா்வுகளால் திருவாரூா் பகுதிகளில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com