நீடாமங்கலம்: போட்டோ ஸ்டூடியோ உரிமையாளருக்கு வெடிபொருள் அனுப்பிய 2 பேர் கைது

நீடாமங்கலத்தில் போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர் வீரக்குமார் என்பவருக்கு கூரியர் பார்சலில் வெடி பொருள்கள் அனுப்பிய 2 பேரை காவல்துறையினர் சனிக்கிழமை மாலை கைது செய்தனர். 
நீடாமங்கலம்: போட்டோ ஸ்டூடியோ உரிமையாளருக்கு வெடிபொருள்  அனுப்பிய 2 பேர் கைது

நீடாமங்கலத்தில் போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர் வீரக்குமார் என்பவருக்கு கூரியர் பார்சலில் வெடி பொருள்கள் அனுப்பிய 2 பேரை காவல்துறையினர் சனிக்கிழமை மாலை கைது செய்தனர். 

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் புதுத்தெருவில் வசித்து வருபவர் சுந்தரம் மகன் வீரக்குமார்(40). இவர் நீடாமங்கலம் அப்பாவு பத்தர் சந்து பகுதியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவருக்கு திருச்சியிலிருந்து கூரியர் பார்சல் கடந்த 18ம் தேதி மாலை வந்தது. இந்த பார்சல் திருச்சி தென்னூர் ஹைரோடு பகுதியைச் சேர்ந்த 10.சி. வெள்ளாத் தெரு பகுதி சி.கார்த்திரப்பன் என்ற விலாசத்திலிருந்து வந்தது. பார்சலை பெற்ற வீரக்குமாரை அதனை பிரிக்க வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தினர். பின்னர் க்யூபிரிவு காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள், நீடாமங்கலம் காவல்ஆய்வாளர் சுப்ரியா மற்றும் காவல்துறையினர் சம்மந்தப்பட்ட பார்சலை ஆய்வு செய்தனர். 

பார்சலை பிரித்து பார்த்ததில் பேட்டரி(அ)மின் இணைப்பில் வெடிக்க கூடிய ஜெலட்டீன் குச்சி 1,125 கிராம் எடை கொண்ட டெட்டனேட்டர் 1 இருந்ததை பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். இந்த மாதிரியான வெடி குண்டுகள் மிகப்பெரிய பாறைகளை பிளப்பதற்கும், பெரிய கட்டடங்கள், வாகனங்களை வெடிக்கக் கூடிய சக்திவாய்ந்தது என காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டது. உடனடியாக காவல்துறையினர் வீரக்குமாரிடம் விசாரணை நடத்தினர். அவரிடம் விசாரணை நடத்தியதில் தனக்கும் பார்சலுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை, திருச்சியில் உள்ள நிதி நிறுவனம் மீது சந்தேகம் உள்ளது என்றார். உடனே அந்த பார்சலில் உள்ள வெடி குண்டுகளை எடுத்து நீடாமங்கலம் காவல் நிலையத்தில் உள்ள மணல் நிரப்பிய பிளாஸ்டிக் பக்கட்டில் பத்திரமாக பாதுகாப்பில் வைத்தனர். இதனால் நீடாமங்கலத்தில் பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நீடாமங்கலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 18ம் தேதி இதேபோல் தஞ்சை மாவட்டம் கண்ணந்தங்குடி மேலையூர் வடக்குத்தெருவைச் சேர்ந்த கருணாநிதி மகன் அறிவழவகன் (28) பொறியாளர் என்பவருக்கும் கூரியரில் ஒரு பார்சல் வந்தது. அதில் வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதனை காவல்துறையினர் கண்டறிந்து விசாரணை நடத்தியதின் அடிப்படையில் நீடாமங்கலத்திற்கும் கூரியர் பார்சல் வந்ததை கண்டறிந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திருவாரூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் துரை உத்தரவின் பேரில் நீடாமங்கலம் காவல் ஆய்வாளர் சுப்ரியா தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் வெடிபொருள்கள் அனுப்பிய மர்ம நபர்களைத் தேடிவந்தனர். 

காவல்துறையினர், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுக்கா பூவாத்திரக்குடி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் சத்திய மூர்த்தி(35) தஞ்சாவூர் அருளானந்த நகர்பகுதியைச் சேர்ந்த அமீர் சையது என்கிற அமிர்தராஜ்(48) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர். இருவரும் வெடிபொருள்களை அனுப்பியதை ஒப்புக் கொண்டார்களாம். மேலும் திருச்சி நிதிநிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்து போனதாகவும் தெரிவித்தார்களாம். நிதிநிறுவனத்தினரை சிக்க வைக்க வெடிபொருள்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நீடாமங்கலம் காவல்துறையினர் சத்தியமூர்த்தி, அமீர்சையது ஆகிய இருவரையும் சனிக்கிழமை மாலை கைது செய்தனர். 

இந்த வழக்கு தொடர்பாக சென்னையைச் சேர்ந்த சரவணன் உள்பட மேலும் பலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com