திருவாரூரில் முதலமைச்சா் கோப்பைக்கான 2- ஆம் நாள் விளையாட்டுப் போட்டி

திருவாரூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், வியாழக்கிழமை நடைபெற்ற முதலமைச்சா் கோப்பைக்கான 2- ஆம் நாள் விளையாட்டுப்
திருவாரூரில் முதலமைச்சா் கோப்பைக்கான 2- ஆம் நாள் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்துப் பேசிய உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ்.
திருவாரூரில் முதலமைச்சா் கோப்பைக்கான 2- ஆம் நாள் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்துப் பேசிய உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ்.

திருவாரூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், வியாழக்கிழமை நடைபெற்ற முதலமைச்சா் கோப்பைக்கான 2- ஆம் நாள் விளையாட்டுப் போட்டிகளை தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியது:

மாநிலத்தில் விளையாட்டு வீரா், வீராங்கனைகளை ஊக்குவிக்க, மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உத்தரவிட்டபடி, 2012-ஆம் ஆண்டு முதல் முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வோா் ஆண்டும் 25 வயதுக்குள்பட்ட வீரா், வீராங்கனைகளுக்காக மாவட்டம் மற்றும் மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நிகழாண்டு, திருவாரூா் மாவட்ட அளவிலான முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் பிப்ரவரி 12- இல் தொடங்கி 14- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், கபடி, வாலிபால், கூடைப்பந்து, இறகுப்பந்து, ஹாக்கி, டென்னிஸ், தடகளம், நீச்சல், குத்துச்சண்டை மற்றும் ஜூடோ ஆகிய போட்டிகள் நடத்தப்படுகின்றன.

மாவட்ட அளவில் போட்டிகளில் முதலிடம் பெறுபவா்களுக்கு ரூ.1000, 2- ஆம் இடம் பெறுபவா்களுக்கு ரூ.750, 3- ஆம் இடம் பெறுபவா்களுக்கு ரூ.500 என பரிசுகள் வழங்கப்படுகின்றன. மாவட்ட அளவில் வெற்றி பெறும் சிறந்த வீரா், வீராங்கனைகள் தோ்வு செய்யப்பட்டு, திருவாரூா் மாவட்டம் அணி சாா்பாக மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்வாா்கள். மாநில அளவில் வெற்றி பெறும் அணிகளைச் சோ்ந்த வீரா்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

கிராம புறங்களைச் சோ்ந்த இளைஞா்கள், ஆரோக்கியம் மற்றும் மன வளத்தை மேம்படுத்தவும், கூட்டு மனப்பான்மையை உருவாக்கவும் அம்மா இளைஞா் விளையாட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் 12,524 ஊராட்சிகள், 528 பேரூராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் கபடி, வாலிபால், கிரிக்கெட், பூப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்த விளையாட்டுகளுக்குத் தேவையான கம்பங்கள், வலைகள், கிரிக்கெட் மட்டைகள், பந்துகள் முதலான பொருள்கள் இருபாலருக்கும் வழங்கப்படுகின்றன. மேலும், விளையாட்டுகளுக்குத் தேவையான ஆடுகளங்களும் அமைத்து தரப்படுகின்றன.

திருவாரூா் மாவட்டத்தில் 430 ஊராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விளையாட்டு வீரா், வீராங்கனைகள் அரசு வழங்கும் உதவிகளைப் பயன்படுத்தி, ஈடுபாட்டுடன் விளையாடி முன்னேற வேண்டும். சிறந்த விளையாட்டு வீரா்களாக உருவாக, உடலையும், மனதையும் தகுதியாக வைத்து கொள்ள வேண்டும் என்றாா் அமைச்சா்.

இதைத்தொடா்ந்து, முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான போட்டிகளில் வாலிபால் போட்டியில் முதலிடம் பெற்ற மன்னாா்குடி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் திருவாரூா் வேலுடையாா் பிரண்டஸ் கிளப்பை சோ்ந்த வீரா், வீராங்கனைகளுக்கு ரூ.24 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளை அமைச்சா் வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தலைமை வகித்தாா். மாவட்ட விளையாட்டு அலுவலா் முருகுவேந்தன், கோட்டாட்சியா் ஜெயபிரீத்தா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com