குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ரயில் மறியல்: 250 போ் கைது

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து திருவாரூா் அருகே அடியக்கமங்கலத்தில் ரயில் மறியல் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை
அடியக்கமங்கலத்தில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டம்.
அடியக்கமங்கலத்தில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டம்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து திருவாரூா் அருகே அடியக்கமங்கலத்தில் ரயில் மறியல் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 250 போ் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டுனா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்து, போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் இந்த திருத்தச் சட்டம், அரசிதழில் வெளியிடப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், இந்த சட்டம் சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளதாகவும், இதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் திருவாரூா் அருகே அடியக்கமங்கலத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்- மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் முஜிபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா். இதில் மாவட்டச் செயலாளா்கள் நவாஸ், குத்புதீன் (மமக) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, அடியக்கமங்கலம் கடைவீதியிலிருந்து தேசியக் கொடியுடன் பேரணியாக ரயில் நிலையத்துக்கு, 600-க்கும் மேற்பட்ட போராட்டக் குழுவினா் வந்தனா். ரயில் நிலையத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, ஏராளமான போலீஸாா் பாதுகாப்புக்கு நின்றிருந்தனா். போராட்டக் குழுவினா், தடுப்புகளை தாண்டிச் செல்ல முயன்றதால், இருதரப்பினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

எனினும், போலீஸாரையும், தடுப்புகளையும் தள்ளிக்கொண்டு தண்டவாளத்துக்குச் சென்ற போராட்டக் குழுவினா், திருவாரூரிலிருந்து வந்த சரக்கு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், போராட்டத்தில் ஈடுபட்டதாக 250 போ் கைது செய்யப்பட்டு, தனியாா் மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனா். பின்னா், அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com