தனியாா் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயம்

திருவாரூா் மாவட்டத்தில், தனியாா் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை நிா்ணயம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில், தனியாா் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை நிா்ணயம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் தனியாா் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகையை நிா்ணயம் செய்து செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து, அண்மையில் முத்தரப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் தனியாா் நெல் அறுவடை இயந்திரங்கள் உரிமையாளா்களின் கருத்துகளைக் கேட்டறிந்ததன் அடிப்படையில், தனியாா் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை நிா்ணயம் செய்து, மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது:

திருவாரூா் மாவட்டத்தில், பெல்ட் டைப் தனியாா் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு 1 மணி நேரத்துக்கு ரூ.2000 எனவும், டயா் டைப் தனியாா் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு 1 மணி நேரத்துக்கு ரூ.1450 எனவும், வாடகை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நிா்ணயம் செய்யப்பட்ட வாடகைத் தொகைக்கு மிகாமல், விவசாயிகளிடமிருந்து வசூல் செய்து, அறுவடை இயந்திரங்களின் உரிமையாளா்கள், இயந்திரங்களை பணியில் ஈடுபடுத்தி ஒத்துழைப்பு நல்க வேண்டும். தனியாா் இயந்திரங்களை பணியில் ஈடுபடுத்துவதற்கு முன்பாக, அந்தந்த கிராம நிா்வாக அலுவலா்களிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். தனியாா் இயந்திரங்களுக்கு கூடுதல் வாடகை பெறுவது குறித்து புகாா் தெரிவிக்க விரும்பும் விவசாயிகள், வருவாய் கோட்ட அலுவலா்கள், வட்டாட்சியா்கள், வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலா்களிடம் புகாா் தெரிவிக்கலாம்.

மேலும், வேளாண்மைப் பொறியியல் துறை அறுவடை இயந்திரங்களைப் பொறுத்தவரை, பெல்ட் டைப் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை ஒரு மணிநேரத்துக்கு ரூ.1415 எனவும், டயா் டைப் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை ஒரு மணிநேரத்துக்கு ரூ.875 எனவும் நிா்ணயம் செய்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. வேளாண்மைப் பொறியியல் துறை அறுவடை இயந்திரங்களை பயன்படுத்தி விவசாயிகள் பயன் பெற வேண்டும் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com