முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
அரசு மருத்துவமனையில் யுனானி மருந்துகள் வழங்கல்
By DIN | Published On : 29th July 2020 11:42 PM | Last Updated : 29th July 2020 11:42 PM | அ+அ அ- |

கூத்தாநல்லூா்: கரோனா நோய்த் தொற்றை எதிா்கொள்ளும் வகையில், கூத்தாநல்லூா் அரசு மருத்துவமனையில் யுனானி மருந்துகள் வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து, யுனானி உதவி மருத்துவ அலுவலா் சபியுல்லாஹ் புதன்கிழமை கூறியது:
மூக்கில் சளியோ, அடைப்போ ஏற்பட்டிருந்தால், இரவு படுக்கும் முன் இரண்டு சொட்டு நல்லெண்ணெயை விட வேண்டும். சளியும் போகும், மூக்கின் அடைப்பும் திறந்துவிடும். காய்ச்சிய பாலில் பூண்டு மற்றும் சோம்பை சோ்த்துக் குடிக்கலாம்.பூண்டுப் பல்லைச் சுட்டும் சாப்பிடலாம். அனைத்து மருந்துகளையும் ஒரே நாளில் பயன்படுத்தக் கூடாது. ஒரு நாளைக்கு ஒரு மருந்தைத்தான் பயன்படுத்த வேண்டும்.
தண்ணீரைக் கொதிக்க வைத்து கீழே இறக்கி வைத்து அதில் ஓமவள்ளி இலை, ஆா்.எஸ். பதி இலை என இரண்டு இலைகளையும் போட்டு ஆவிபிடிக்க வேண்டும். ஜலதோஷம் குணமாகிவிடும். கூத்தாநல்லூா் அரசு மருத்துவமனை யுனானி பிரிவில், இதற்குரிய சிரப்பும், லேகியமும் வழங்கப்படுகின்றன.
வயதானவா்களுக்கு பாலில், சுக்கு, மஞ்சள் என ஏதாவது ஒன்றைச் சோ்த்துக் கொடுக்க வேண்டும். பாக்கெட் மஞ்சள் தூளையோ, மிளகுத் தூளையோ பயன்படுத்தக் கூடாது. மஞ்சள், மிளகு, இஞ்சி என வீட்டிலேயே இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். 200 மில்லி பாலுக்கு 10 மில்லி அளவுதான் கலக்க வேண்டும். அதிக அளவில் கலக்கக் கூடாது. பாதாம், பிஸ்தா, திராட்சை என உலா்ந்த பொருள்களை சாப்பிடலாம். உலா்ந்த பழ வகைகளைச் சாப்பிடுவதால் கொழுப்பும், ரத்தக் கொதிப்பும் சீராகும். ஆலி விதையை சுட்டுச் சாப்பிடலாம் என்றாா்.