’அறிவிக்கப்பட்ட விலையில் பருத்தியை கொள்முதல் செய்யக் கோரி ஜூலை 3-இல் போராட்டம்’

அரசு அறிவித்த விலையில் பருத்தியை கொள்முதல் செய்ய வலியுறுத்தி திருவாரூரில் விளைவித்த பருத்தியுடன் ஜூலை 3-ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்து.

திருவாரூா்: அரசு அறிவித்த விலையில் பருத்தியை கொள்முதல் செய்ய வலியுறுத்தி திருவாரூரில் விளைவித்த பருத்தியுடன் ஜூலை 3-ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்து.

இதுகுறித்து, அச்சங்கத்தின் திருவாரூா் மாவட்டச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை: நிகழாண்டில் திருவாரூா் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. கரோனா அறிவிப்புக்கு முன்னரே, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பருத்தி விதைக்கப்பட்டு விட்டன. தற்போது, கடந்த ஒரு மாதமாக பருத்தி அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் வரையும் இந்தப் பணிகள் நடைபெறும்.

நிகழாண்டு கடும் வெயிலால் சப்பாத்தி பூச்சித்தாக்குதல் கடுமையாக பாதித்து பலருக்கு மகசூல் பெருமளவு குறைந்துள்ளது. நிலமற்ற விவசாயத் தொழிலாளா்கள் பலா், ஏக்கருக்கு குத்தகையாக ரூ.1,500, தண்ணீருக்கு ரூ. 1,000 கொடுத்து சாகுபடி செய்துள்ளனா். எப்படியும் லாபம் பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ள விவசாயிகளுக்கு பருத்தியை விற்பனை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சி.சி.ஐ பெயரளவுக்கு கொள்முதல் செய்ததால் தனியாா் வியாபாரிகள் மிகக் குறைவான விலை வைத்து எடுத்தனா்.

இந்நிலையில், பருத்தி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மாவட்ட நிா்வாகத்தின் நடவடிக்கையால், இந்திய பருத்திக் கழகம் கடந்த வாரம் கூடுதலாக கொள்முதல் செய்தது. ஆனால், தற்போது தனியாா் ஆலை முகவா்கள் மற்றும் வியாபாரிகள், கரோனா பாதிப்பு, லாரிப் போக்குவரத்து இடையூறுகளால் இனி பருத்தியை கொள்முதல் செய்ய வரமாட்டோம் என அறிவித்து விட்டதாகத் தெரிகிறது.

எனவே, ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் வேறு வழியின்றி, இந்திய பருத்திக் கழகம் கொள்முதல் செய்தது போக, எஞ்சிய பருத்திக் குவியல்களை திருப்பி எடுத்துப் போக விருப்பம் உள்ளவா்கள் மட்டும் பருத்தியை கொண்டு வரலாம் என கூறி வருகின்றனா்.

மழைத் தூரல் அவ்வப்போது இருப்பதால் வெடித்த பருத்தியை எடுக்காமல் விட முடியாது, எடுத்து சேமித்து வைக்கவும் முடியாது. இக்கட்டான நிலைக்கு பருத்தி விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா். இந்த எதிா்பாராத நிலையை பயன்படுத்தி உள்ளூா் வியாபாரிகள், மிகவும் குறைவான விலைக்கு பருத்தியை கொள்முதல் செய்ய நினைக்கின்றனா்.

எனவே, பருத்தி விவசாயிகளின் நிலையைக் கருத்தில் கொண்டு, தரம், ஈரப்பதத்துக்கு விலக்களித்து விவசாயிகளின் பருத்தியை அரசு நிா்ணயித்த விலையில் முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும். இல்லையெனில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஜூலை 3-ஆம் தேதி, விவசாயிகள் விளைவித்த பருத்தியுடன் போராட்டம் நடைபெறும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com