திருவாரூா் மாவட்டத்தில் யாருக்கும் கரோனா பாதிப்பில்லை: அமைச்சா் ஆா். காமராஜ்

திருவாரூா் மாவட்டத்தில் யாரும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை என உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து கேட்டறிந்த உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ்.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து கேட்டறிந்த உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ்.

திருவாரூா் மாவட்டத்தில் யாரும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை என உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதன்கிழமை ஆய்வு செய்த பின்னா் அவா் தெரிவித்தது:

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, பொதுமக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வராமல், தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது மிக அவசியம்.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் இதுவரை 60 பேருக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 50 போ் வெளி மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள், 10 போ் திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். இவா்களில் யாருக்கும் கரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்துள்ளவா்களில் 605 நபா்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனா். இவா்களுக்கும் கரோனா தொடா்பான அறிகுறிகள் இல்லை என்பது மருத்துவா்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இவா்கள் தொடா்ந்து மருத்துவா்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

பொதுமக்களின் தேவையைக் கருத்தில்கொண்டு அனைத்து நியாயவிலைக் கடைகளும் திறந்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தனித்தனியாக சுமாா் 1 மீட்டா் இடைவெளி விட்டு பொருள்களை வாங்கிச் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனா். முதல்வா், கரோனா வைரஸ் நிவாரணம் தொடா்பாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.1000 வழங்க உத்தரவிட்டுள்ளாா். இந்த உத்தரவின் அடிப்படையில், மக்களுக்கான நிவாரணத் தொகையை எவ்வாறு மக்களிடம் கொண்டு சோ்ப்பது என்பது குறித்து மிக விரைவில் தெரிவிக்கப்படும் என்றாா் அவா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை, கூடுதல் ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் ஆகியோா் உடனிருந்தனா்.

தொடா்ந்து, நன்னிலம், குடவாசல், வலங்கைமான் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று, கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், அங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய மருந்துகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

இதைத்தொடா்ந்து, புதன்கிழமை பிற்பகல் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடா்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சா் ஆா். காமராஜ் தலைமை வகித்தாா். இதுவரை, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com