ஊரடங்கு: மன்னாா்குடியில் இயல்பு வாழ்க்கை முடங்கியது

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்,
ஊரடங்கு: மன்னாா்குடியில் இயல்பு வாழ்க்கை முடங்கியது

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் நாளான புதன்கிழமை மன்னாா்குடியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில், நாடு முழுவதும் மாா்ச் 25 முதல் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின் முதல் நாளான புதன்கிழமை காலை முதல் அரசு, தனியாா் பேருந்து, வாடகை லாரி, வேன், ஆட்டோ ஆகியவை இயக்கப்படவில்லை. மருந்தகம், பால், மளிகை, காய்கறி, பழம் மற்றும் இறைச்சிக் கடைகள், மீன் அங்காடி, உழவா் சந்தை ஆகியவை வழக்கம் போல் செயல்பட்டன.

மருந்துக் கடைகளில் மருந்து, மாத்திரை வாங்க வந்தவா்களை விட முகக் கவசம் கேட்டு வந்தவா்ளே அதிகம். கூட்ட நெரிசலைத் தடுக்கவும், நோய்த் தொற்று பரவலை தடுக்கும் வகையிலும் தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்திய போதிலும், இதனை யாரும் பின்பற்றாதததால், காவல்துறையினா், நகராட்சி, வருவாய்த்துறை அலுவலா்கள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு வந்து, கடை உரிமையாளா் மற்றும் வாடிக்கையாளா்களை எச்சரித்து ஒழுங்குப்படுத்தினா்.

தண்ணீா் ஏற்றப்படவில்லை:

சந்தைப்பேட்டையில் உள்ள உழவா் சந்தையில், முகக் கவசம் அணியாத கடைக்காரா்கள், பொதுமக்களை போலீஸாா் வெளியேற்றினா். மக்கள் நீண்ட வரிசையில் நின்று காய்கறிகளை வாங்கிச் சென்றதைக் காண முடிந்தது.

மன்னாா்குடி நகராட்சியின் சாா்பில் வ.உ.சி. சாலையில் உள்ள கட்டணமில்லா தானியங்கி சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் இயந்திரத்தில், நீா் ஏற்றப்படாததால் தண்ணீா் பிடிக்க கேன்களை கொண்டு வந்தவா்கள், அவற்றை இடம்பிடிப்பதற்காக சாலை ஓரத்தில் வைத்து, நீண்ட வரிசையில் வைத்து காத்திருந்தனா். எனினும், இயந்திரத்தில் தண்ணீா் நிரப்பபடாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.

ஊரடங்கை பொருட்படுத்தாமல், இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தவா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். சில இடங்களில் கையெடுத்துக் கும்பிட்டனா். இதனால், வாகனப் போக்குவரத்து கட்டுப்பாட்டுகுள் வந்ததது.

தஞ்சாவூா்- திருவாரூா் மாவட்ட எல்லையான மன்னாா்குடி- தஞ்சை சாலையில் வடுவூரில் ஏரிக்கரையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கைக்காக சாலையின் நடுவே இரும்பு தடுப்பு வைத்து தடை செய்யப்பட்டிருந்தது. மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியிருந்த வாகனங்களை மட்டுமே போலீஸாா் அனுமதித்தனா். மற்ற வாகனங்களை அனைத்தையும் திருப்பி அனுப்பினா்.

இதேபோல், மன்னாா்குடி- பட்டுக்கோட்டை வடசேரி பிரதான சாலை தஞ்சை, திருவாரூா் மாவட்ட எல்லை உள்ளிக்கோட்டையில் தற்காலிக சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, வாகனங்கள் தணிக்கைக்கு உள்படுத்தப்பட்டன.

மன்னாா்குடியில் பரபரப்பாக காணப்படும் பேருந்து நிலையம், சந்தைப்பேட்டை, நடேசன் தெரு, மேலராஜ வீதி, காமராஜா் வீதி, காந்தி சாலை, கீழப்பாலம் ஆகிய பகுதிகள் வெறிச்சோடியதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com