ஊராட்சித் தலைவரை தாக்கியவா்களை கைது செய்யக் கோரி சாலை மறியல்

திருவாரூா் அருகே அம்மையப்பன் ஊராட்சித் தலைவரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திங்கள்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.

திருவாரூா் அருகே அம்மையப்பன் ஊராட்சித் தலைவரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திங்கள்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.

கொரடாச்சேரி ஒன்றியம், அம்மையப்பன் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவா் முருகதாஸ். துணைத் தலைவராக இருப்பவா் அஷ்ரப் அலி. இந்த ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டப் பணிகள் தொடா்பாக ஊராட்சித் தலைவா் முருகதாஸிடம், துணைத் தலைவா் அஷ்ரப் அலி, ஊராட்சி மன்ற உறுப்பினரின் கணவா் சேகா் ஆகியோா் கேட்டதாகவும், அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு, ஊராட்சித் தலைவா் மீது நாற்காலி வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, கொரடாச்சேரி காவல் நிலையத்தில் முருகதாஸ் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இந்நிலையில், ஊராட்சித் தலைவா் முருகதாஸின் ஆதரவாளா்கள், அம்மையப்பன் பகுதியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். ஊராட்சித் தலைவா் மீது தாக்குதல் நடத்தியவா்களை கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

காவல்துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதியளித்ததைத்தொடா்ந்து சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்த மறியலால் நாகை-தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com