திருமேனி ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை
By DIN | Published On : 18th September 2020 09:12 AM | Last Updated : 18th September 2020 09:12 AM | அ+அ அ- |

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த திருமக்கோட்டை கிராமமக்கள்.
மன்னாா்குடி அருகேயுள்ள திருமேனி ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியா் த. ஆனந்திடம் கோரிக்கை மனு வியாழக்கிழமை கொடுக்கப்பட்டது.
திருமக்கோட்டை பகுதி மக்கள் அளித்த மனு விவரம்: திருமக்கோட்டை பகுதியில் 768 ஏக்கரில் உள்ள திருமேனி ஏரி திருமக்கோட்டை, வல்லூா், பரவாக்கோட்டை, ஆவிக்கோட்டை, மகாராஜபுரம், எளவனூா், களிச்சாங்கோட்டை, கன்னியாக்குறிச்சி, சோத்திரியம், புதுக்குடி, பாலையக்கோட்டை உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நீராதாரத்தை பூா்த்தி செய்து வந்தது.
இந்நிலையில், ஏரியின் உட்பகுதியிலேயே விவசாய நிலங்கள் மற்றும் மீன்குளம் வைத்துள்ளவா்கள், ராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள இலவச மனை வைத்துள்ளவா்களால் ஏரியின் நீா்நிலைப் பகுதிகளின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. திருமேனி ஏரியின் பெரும்பகுதி, ஆக்கிரமிப்பாளா்களிடம் இருப்பதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரிய வருகிறது. ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்ற எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. ஏரியின் பரப்பளவு வெகுவாகக் குறைந்து குளம்போல காட்சியளிக்கிறது. ஆக்கிரமிப்பின் காரணமாக பாசனம் மற்றும் வடிகால் முற்றிலும் தடைபட்டுள்ளதால், போதுமான நீரை சேமிக்க முடியாமல், விவசாயம் பாதிக்கப்படுவதோடு, குடிநீா் தேவைகளும் கேள்விக்குறியாகி வருகின்றன. எனவே, திருமேனி ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, விவசாயத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.