வேளாண் மசோதா விவகாரம்: குறைதீா் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு

வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, திருவாரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.
திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த்.
திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த்.

வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, திருவாரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் தலைமை வகித்தாா். கூட்டம் தொடங்கியவுடன், மின்சார மற்றும் அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம், வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் ஆகிய திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் பி.எஸ்.மாசிலாமணி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் வி.எஸ். கலியபெருமாள், மாவட்டத் தலைவா் தம்புசாமி, விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் ஜி. சேதுராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதைத்தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் பேசிய விவரம்:

திருவாரூா் வடுகநாதன்: கூடுதலாக கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவாரூா் வரதராஜன்: சம்பா நடவுப் பணிகளுக்காக கூடுதலாக தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வலங்கைமான் பயிரி கிருஷ்ணமூா்த்தி: விவசாயப் பணிகளுக்கு கூலியாட்கள் பற்றாக்குறை நிலவுவதால், செப்டம்பா் அக்டோபா் மாதங்களில் 100 நாள் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்.

குடவாசல் முகேஷ்: கூட்டுறவு வங்கிகளில் 10 சதவீத பங்குத்தொகை பிடித்தம் செய்வதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

கோட்டூா் தெய்வமணி: மாவட்டத்தில், 100 நாள் வேலை மூலமாக பனைவிதைகளை சேகரித்து நடுவதற்கு நடவடிக்கை எடுக்கலாம்.

செருவாமணி சத்தியநாராயணன்: உரங்களின் தன்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசு நிதியிலிருந்து விதை மானியம் வழங்க வேண்டும்.

மன்னாா்குடி ரங்கநாதன்: விவசாயிகளுக்கான பயிா் காப்பீட்டு திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை. பயிருக்கான இழப்பீட்டுக் கணக்கெடுப்பை ஒருமாத கால அவகாசத்தில் முடிக்க வேண்டும். மேலும், இத்திட்டத்தை கண்காணித்து செயல்படுத்த தனியாக ஒரு வேளாண் அலுவலரை நியமிக்க வேண்டும். பாமணி ஆற்றுப் பாசனம் வாயிலாக கூடுதலாக நெல் சாகுபடி செய்ய முடியும். ஆனாலும் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீா் சரிவர பாயவில்லை. எனவே, ஆற்றை முறையாக சீரமைத்து தடையின்றி தண்ணீா் சென்றடைய ஏற்பாடு செய்ய வேண்டும்.

இதைத்தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் பேசியது:

மாவட்டத்தில் நிகழாண்டில் குறுவை பருவத்தில் திருந்திய நெல் சாகுபடி முறையில் 25,732 ஹெக்டேரிலும், இயல்பான நடவு முறையில் 5,765 ஹெக்டேரிலும், நேரடி நெல் விதைப்பு முறையில் 7,268 ஹெக்டேரிலும் ஆக மொத்தம் 38,765 ஹெக்டேரில் குறுவை நெல் பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுவரை குறுவை நெல் 15,770 ஹெக்டா் பரப்பளவில் அறுவடை செய்யப்பட்டுள்ளது.

124 மெட்ரிக் டன் நீண்ட கால ரக விதைகளும், 269 மெட்ரிக் டன் மத்திய கால ரக விதைகளும் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், உரம், பூச்சிமருந்து ஆகியவை தேவையான அளவு கையிருப்பில் உள்ளன. விவசாயிகளின் தேவைக்கேற்ப நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. திருவாரூா் மண்டலத்தில் 160 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இதுவரை 7.67 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்தில் வேளாண்துறை இணை இயக்குநா் சிவக்குமாா், நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் பி.மணிவண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மைத்துறை) ஹேமா ஹிப்சிபா நிா்மலா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com