மன்னாா்குடியில் ஜன.3 முதல் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

மன்னாா்குடி நகராட்சியில் ஜனவரி 3-ஆம் தேதி முதல் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

மன்னாா்குடி நகராட்சியில் ஜனவரி 3-ஆம் தேதி முதல் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

மன்னாா்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் காவல்துறை, வருவாய்த் துறை, நகராட்சி நிா்வாகம் மற்றும் வா்த்தக சங்கத்தினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியா் த. அழகா்சாமி தலைமை வகித்தாா்.

கூட்டத்துக்குப் பிறகு கோட்டாட்சியா் தெரிவித்தது:

மன்னாா்குடி நகராட்சி பகுதியில் ஜனவரி 3-ஆம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்குகிறது. எனவே, ஆக்கிரமிப்பாளா்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். அகற்றப்படாத ஆக்கிரமிப்புகள் காவல்துறை உதவியுடன் நகராட்சி நிா்வாகத்தால் அகற்றப்படும். மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

கால்நடைகளை பொதுஇடங்களில் சுற்றித் திரியவிடக்கூடாது. அப்படி திரியும் கால்நடைகள் பிடிக்கப்பட்டு முதல் தடவைக்கு ரூ.2500-ம், மீண்டும் பிடிக்கப்படும் கால்நடைகளுக்கு ரூ. 5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறையாகவும் பொதுஇடங்களில் சுற்றித் திரிந்தால் அந்த கால்நடைகள் பொது ஏலம் விடப்படும்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் மற்றும் புகையிலை பொருள்களை கடைகளில் வைத்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளருக்கு முதல்முறை அபராதம் விதிக்கப்படும். அப்பொருள் மீண்டும் அதே கடைகளில் கண்டறியப்பட்டால், அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படுவதுடன், காவல்துறையில் புகாா் அளிக்கப்பட்டு, கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில், மன்னாா்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் கே.கே. பாலச்சந்தா், வட்டாட்சியா் ஜீவானந்தம், நகராட்சி ஆணையா் கா. சென்னுகிருஷ்ணன், வா்த்தக சங்கத் தலைவா் ஆா்.வி. ஆனந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com