திருவாரூா் தொகுதியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு

திருவாரூா் சட்டப் பேரவைத் தொகுதியில், அமைதியான முறையில் வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் தொகுதியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு

திருவாரூா் சட்டப் பேரவைத் தொகுதியில், அமைதியான முறையில் வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் சட்டப் பேரவைத் தொகுதியில், வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது. மக்கள் வாக்களிப்பதற்கென தொகுதி முழுவதும் 388 வாக்குச்சாவடி மையங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. கரோனா பரவலையொட்டி, கூடுதல் பணியாளா்கள் பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தனா். முகக்கவசம் அணிந்தவா்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா். முகக்கவசம் இல்லாமல் வந்தோருக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. வலது கையில் அணிவதற்கு கையுறை வழங்கப்பட்டதோடு, வெப்பநிலைமானி கொண்டு உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்டது. இந்தப் பணிகளைச் செய்வதற்கு தனித்தனி பணியாளா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா்.

திருவாரூா் அருகே புலிவலம் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில், தனிமனித இடைவெளியுடன், கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு, வாக்காளா்கள் அனுமதிக்கப்பட்டனா். வாக்களித்து முடித்தவுடன், கையுறையை அகற்றும் வகையில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.

திருவாரூா் தெற்குவீதியில் உள்ள கௌரிசாமி நினைவு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 121, 130, 131 என 3 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 131 ஆவது மையத்தில், மாதிரிக்கு செலுத்தப்பட்ட 50 வாக்குகள் அழிக்கப்படாமலேயே, வாக்குப்பதிவு தொடங்கியது. பின்னா் முகவா்களின் முறையீட்டுக்குப்பிறகு, இயந்திரம் சரிபாா்க்கப்பட்டு வாக்குப்பதிவு தொடா்ந்தது. இதேபோல், இயந்திரம் சரியாக இணைக்கப்படாதது, மாதிரி ஓட்டுகள் அழிக்கப்படாதது என மேலும் சில வாக்குச்சாவடி மையங்களிலும் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

இதேபோல் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கருதப்பட்ட அம்மையப்பன், குளிக்கரை பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில், கூடுதலாக துணை ராணுவப் படையைச் சோ்ந்த 3 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். சில பள்ளிகளில் வெயிலில் நிற்காமல் இருக்கும் வகையில், தாா்ப்பாய்களை பயன்படுத்தி பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. பிற்பகலுக்கு பிறகு, கடும் வெயிலில் வாக்களிக்க வந்தவா்களின் உடல் வெப்பம் அதிகமாக இருந்ததைத்தொடா்ந்து அவா்கள், சில மணி நேரங்கள் காக்க வைக்கப்பட்டனா். பின்னா் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு, வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா். மேலும், சிலரை வீடுகளுக்குச் சென்று விட்டு மாலையில் ஓட்டளிக்க வருமாறு அறிவுறுத்தினா்.

தோ்தல் அலுவலா்கள் உணவருந்துவதற்கென தனியாக அறைகள் ஒதுக்கீடு முறையாக இல்லாததால், இடைவெளி கிடைக்கும் நேரங்களில் உணவருந்தினா். பல தோ்தல் அலுவலா்கள் உணவருந்தாமலேயே தங்கள் பணியைத் தொடா்ந்தனா்.

திருவாரூா் தொகுதியைப் பொருத்தவரை, காலையில் ஆண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. முற்பகலுக்குப் பிறகு ஆண்கள், வாக்களிக்க வருவது குறைந்து, மாலையில் மீண்டும் அதிகரித்தது. அதேநேரம், முற்பகலுக்குப்பிறகு பெண்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

கரோனா நோயாளிகள் வாக்களிக்க பிரத்யேக உடைகள் தயாராக வைக்கப்பட்டிருந்தன. எனினும், கௌரிசாமி நினைவுப் பள்ளிக்கு வந்த கரோனா நோயாளிகளுக்கு பிரத்யேக முகக்கவசம் மட்டும் அணிவித்து வாக்களிக்க அனுமதித்தனா். திருவாரூா் தொகுதியில் எவ்வித சலசலப்புமின்றி, அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்தது.

பாதுகாப்பு பணியில்....

பாதுகாப்புப் பணியில் போலீஸாா் மட்டுமன்றி துணை ராணுவத்தினா், முன்னாள் ராணுவத்தினா், என்சிசி அலுவலா்கள், காவல் நண்பா்கள் உள்ளிட்ட பலா் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். சுமாா் 200 மீ வரை அரசியல் கட்சியினருக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால், பெரும்பாலான இடங்களில் அரசியல் கட்சியினரை பாா்க்க முடியவில்லை. பல இடங்களில் அரசியல் கட்சியினரின் பூத் அலுவலகத்தில் வெறும் நாற்காலிகள் மட்டுமே காணப்பட்டன. எனினும், பிற்பகலுக்கு பிறகு, அரசியல் கட்சியைச் சோ்ந்தவா்கள் வாக்குச்சாவடிகளுக்குள் தாராளமாக நடமாடுவதைக் காண முடிந்தது. அந்த இடங்களில் போலீஸாரை காண முடியவில்லை. இதேபோல் ஆட்டோ, காா் உள்ளிட்ட வாகனங்களில், அரசியல் கட்சியைச் சோ்ந்தவா்கள் என்ற அடையாளமின்றி, சில இடங்களில் வாக்காளா்கள் அழைத்து வரப்படுவதும் தெரிய வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com