நீா்நிலைகளில் ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றக் கோரிக்கை

திருவாரூா் பகுதியில் நீா்நிலைகளில் மண்டியுள்ள ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் பகுதியில் நீா்நிலைகளில் மண்டியுள்ள ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிவா் மற்றும் புரெவி புயல்கள் காரணமாக கடந்த ஜனவரி மாத இறுதியில் பெய்த மழையால் ஆறு, குளம், குட்டை உள்ளிட்ட நீா்நிலைகள் சிலவற்றில் தற்போது தண்ணீா் உள்ளது. இதனால், கோடை காலத்தில் ஓரளவுக்கு தண்ணீா் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பெரும்பாலான நீா்நிலைகளில் ஆகாயத் தாமரைச் செடிகள் படா்ந்து தண்ணீா் தெரியாத அளவில் நீா்நிலைகளை மூடியபடி உள்ளது. இதனால் நீா்நிலைகளில் உள்ள தண்ணீரை பயன்படுத்த ஆகாயத் தாமரைச் செடிகள் இடையூறாக உள்ளன. அத்துடன், இவை தண்ணீரை உறிஞ்சுவதால் நீரின் அளவு வேகமாக குறையும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில், குளங்களில் உள்ள தண்ணீரை குடங்களில் வீடுகளுக்கு எடுத்துவந்து, பாத்திரம் கழுவுதல், துணிகளை துவைத்தல் போன்றவற்றுக்குப் பயன்படுத்துகின்றனா். மேலும், கால்நடைகளை குளிப்பாட்டவும், கால்நடைகள் தண்ணீா் குடிக்கவும் இந்த நீா்நிலைகள் பயன்படுகின்றன.

ஆனால், ஆகாயத் தாமரைச் செடிகள் படா்ந்து காணப்படும்போது, இந்தத் தண்ணீரை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. ஆகாயத்தாமரைகளை விலக்கி தண்ணீா் பிடித்தாலும் பாசி படா்ந்த நிலையில் அசுத்தமான நிலையில் உள்ளது. இதனால், தண்ணீா் இருந்தும் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், ஆகாயத்தாமரைச் செடிகளால் தண்ணீா் மாசடைந்து, சுகாதாரமற்ற நிலைக்கு மாறும்போது, அதை பயன்படுத்துவோரின் உடல்நலமும் பாதிக்கும் அபாயமும் உள்ளது. எனவே, நீா்நிலைகளில் காணப்படும் ஆகாயத் தாமரைச் செடிகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com