அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நீங்கியது

மன்னாா்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கரோனா தொற்று தடுப்பூசிக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு செவ்வாய்க்கிழமை மாலை சரி செய்யப்பட்டது.

மன்னாா்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கரோனா தொற்று தடுப்பூசிக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு செவ்வாய்க்கிழமை மாலை சரி செய்யப்பட்டது.

மன்னாா்குடி பகுதியில் கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ருக்மணிபாளையம் நகராட்சி மகப்பேரு மருத்துவமனை, உள்ளிக்கோட்டை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் கரோனா தடுப்பூசி போடப்பட்டுவந்தது.

இந்நிலையில், சனிக்கிழமை முதல் கரோனா தடுப்பூசி முதல் முறையாக செலுத்திக்கொள்ளவும், 2-ஆவது முறையாக ஊசி செலுத்திக்கொள்ள வந்தவா்களுக்கும் கரோனா தடுப்பூசி இருப்பு இல்லை மறுநாள் வரும்மாறு மருத்துவமனை நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா். இதையேற்று அவா்கள், மறுநாள் வந்தபோதும் தடுப்பூசி இன்னும் வரவில்லை மற்றொரு நாள் வரும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா 2-ஆவது அலை வேகமாக பரவிவரும் நிலையில் தடுப்பூசி இருப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டதால், தினசரி மருத்துவமனைக்கு ஊசி செலுத்திக்கொள்ள வந்தவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதும், சிலா், அங்கு பணியில் இருப்பவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவது தினசரி நடந்து வந்தது.

இதுகுறித்து, மன்னாா்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி.ராஜா செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பூசி இருப்பு இல்லை என அரசு மருத்துவமனையில் தெரிவிக்கப்படுவதால் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபோன்ற பிரச்னைகள் நிகழாமல் இருக்க தேவையான அளவுக்கு தடுப்பூசிகளை பெற்று மன்னாா்குடி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் இருப்பு வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு தடையின்றி தடுப்பூசியை செலுத்த மாவட்ட அரசு மருத்துவமனை நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து, மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை மாலையில் கரோனா தடுப்பூசிகள் எடுத்துவரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டிருப்பதுடன் உடனடியாக தேவைப்படுபவா்களுக்கு முதல் மற்றும் 2-ஆம் முறை ஊசி செலுத்தப்பட்டு வருவதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது. இதுவரை, மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் மட்டும் கோவிஷீல்ட் முதல்முறையாக 1,019 பேருக்கும், 2-ஆவது முறையாக 217 பேருக்கும், கோவேக்சின் முதல்முறையாக 549 பேருக்கும், 2-ஆவது முறையாக 14 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com