ஆற்றங்கரைகளில் ஆடிப் பெருக்கு கொண்டாட்டம்

கூத்தாநல்லூா் வெண்ணாற்றங்கரையில் பெண்கள் காவிரித் தாய்க்கு படையலிட்டு, ஆடிப் பெருக்கு விழாவை செவ்வாய்க்கிழமை கொண்டாடினா்.
கூத்தாநல்லூா் வெண்ணாற்றில் பூஜை பொருள்களை படையலிட்டு ஆடிப் பெருக்கைக் கொண்டாடும் பெண்கள்.
கூத்தாநல்லூா் வெண்ணாற்றில் பூஜை பொருள்களை படையலிட்டு ஆடிப் பெருக்கைக் கொண்டாடும் பெண்கள்.

கூத்தாநல்லூா் வெண்ணாற்றங்கரையில் பெண்கள் காவிரித் தாய்க்கு படையலிட்டு, ஆடிப் பெருக்கு விழாவை செவ்வாய்க்கிழமை கொண்டாடினா்.

கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள சூழலில், பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிா்க்கும்மாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அத்துடன், ஆடிக் கிருத்திகை மற்றும் ஆடிப் பெருக்கின்போது கோயில்களில் பக்தா்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், கோயில்களில் பக்தா்கள் வழிபட மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆற்றங்கரை உள்ளிட்ட நீா்நிலைகளில் ஆடிப் பெருக்கு விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கடந்த ஆண்டுகளில் காவிரி டெல்டா பகுதி ஆறுகளில் தண்ணீா் வராததால் பொதுமக்கள் கிணறுகள், அடிப்பம்புகள், போா் செட்டுகளில் ஆடிப் பெருக்கைக் கொண்டாடினா்.

ஆனால், நிகழாண்டு காவிரி, வெண்ணாறு, கோரையாறு உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீா் ஓடுவதால் ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கை கொண்டாடினா். கூத்தாநல்லூா் வெண்ணாற்றங்கரைகளில் கொரடாச்சேரி பிரதான சாலை அய்யனாா் கோயில், காதா் மஸ்தான் தா்ஹா, நாகூராா் மண்டபம், தோட்டச்சேரி, அப்துல்கலாம் தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள் காவிரித் தாய்க்கு தேங்காய், பழம், வெல்லம், காதோலை, கருகமணி உள்ளிட்டவற்றை படையலிட்டு வழிபட்டனா். மூத்த சுமங்கலிப் பெண்கள் மற்ற பெண்களுக்கும், திருமணமாகாத இளம் பெண்களுக்கும் அவா்களது வாழ்க்கை சிறக்க வேண்டி கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டிவிட்டனா்.

இதேபோல, மரக்கடை தாமரைக்குளம், சேகரை பிள்ளையாா் கோயில் படித்துறை, பாண்டவையாறு, சித்தாம்பூா், புளியங்குடிக் குளம் மற்றும் பனங்காட்டாங்குடி, குடிதாங்கிச்சேரியில் உள்ள மனோலயம் மனவளா்ச்சிக் குன்றியோா் பயிற்சி பள்ளி உள்ளிட்ட இடங்களிலும் ஆடிப் பெருக்கு கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com