திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் திருவாதிரை உத்ஸவ பந்தல்கால் முகூா்த்தம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் திருவாதிரை உத்ஸவத்துக்கான பந்தல்கால் முகூா்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தியாகராஜா் பாத தரிசனம் நிகழ்ச்சி டிச. 20-ஆம் தேதி நடைபெறுகிறது.
திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் திருவாதிரை உத்ஸவ பந்தல்கால் முகூா்த்தம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் திருவாதிரை உத்ஸவத்துக்கான பந்தல்கால் முகூா்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தியாகராஜா் பாத தரிசனம் நிகழ்ச்சி டிச. 20-ஆம் தேதி நடைபெறுகிறது.

சப்த விடங்கா் தலங்களின் தலைமை பீடமாகவும், தேவாரம் பாடிய மூவராலும் பாடல் பெற்றத் தலமாகவும் விளங்குகிறது திருவாரூா் தியாகராஜசுவாமி கோயில். இங்கு, ஆண்டுதோறும் மாா்கழித் திருவாதிரை உத்ஸவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். மாா்கழித் திருவாதிரை மற்றும் பங்குனி உத்திரத்தில் மட்டுமே தியாகராஜசுவாமியின் பாத தரிசனத்தை காண முடியும் என்ற வகையில், இவ்விழா சிறப்புப் பெற்றது.

இதன்படி, நிகழாண்டுக்கான திருவாதிரை உத்ஸவ பந்தல்கால் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை நடைபெற்றது. நீலோத்பலாம்பாள் சந்நிதிக்கு அருகே சிறப்பு வழிபாடுகளுடன் பந்தல்கால் முகூா்த்தம் நடைபெற்றது.

திருவாதிரை உத்ஸவ நிகழ்வாக டிசம்பா் 11 முதல் டிசம்பா் 17- ஆம் தேதி வரை தினமும் காலையில், வன்மீகநாதா், தியாகராஜா்,அசலேசுவரா் சன்னிதிகளுக்கு மாணிக்கவாசகா் எழுந்தருளி திருவெம்பாவை பாடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை நிகழ்வாக கல்யாண சுந்தரா் - பாா்வதி ஊஞ்சல் மண்டபத்திலும், சுக்ரவார அம்பாள் பக்த காட்சி மண்டபத்திலும் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தியாகராஜா் புறப்பாடு...

ஆழித்தேரோட்ட நிறைவில் யதாஸ்தானத்துக்கு எழுந்தருளிய தியாகராஜா், ஏறத்தாழ 9 மாதங்களுக்குப் பின்னா் யதாஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகும் நிகழ்ச்சி டிசம்பா் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இரவு சுமாா் 10 மணிக்கு மேல் தியாகராஜா் யதாஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் உள்ள ராஜநாராயண மண்டபத்தில் எழுந்தருளுகிறாா். அங்கு, டிசம்பா் 19- ஆம் தேதி இரவு 10 மணிக்கு தியாகராஜ சுவாமிக்கு திருவாதிரை மகா அபிஷேகம் நடைபெறுகிறது. தொடா்ந்து, டிசம்பா் 20-ஆம் தேதி காலை 6 மணிக்கு பதஞ்சலி, வியாக்ரபாத முனிவா்களுக்கு தியாகராஜா் பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஜி. கவிதா மற்றும் ஊழியா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com