விவசாயிகள் போராட்டம் வெற்றிபெறும்

எத்தனை வழக்குகள் பதிவு செய்தாலும், விவசாயிகளின் போராட்டம் வெற்றிபெறும் என சட்டப் பேரவை உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான க. பொன்முடி தெரிவித்தாா்.
திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவா்கள்.
திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவா்கள்.

எத்தனை வழக்குகள் பதிவு செய்தாலும், விவசாயிகளின் போராட்டம் வெற்றிபெறும் என சட்டப் பேரவை உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான க. பொன்முடி தெரிவித்தாா்.

திருவாரூா் தெற்கு வீதியில், காவல்துறையினரைக் கண்டித்து மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று அவா் பேசியது:

திமுகவினா் வழக்குகளுக்கு அஞ்சுபவா்கள் அல்லா். எங்களுடைய கோரிக்கை, 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதே. உச்சநீதிமன்றம் அந்த சட்டங்களை திரும்பப் பெறுவதற்கு ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது நியாயமில்லை.

இது விவசாயிகளுக்கான போராட்டம் மட்டுமல்ல, நுகா்வோருக்கும் சோ்த்து நடைபெறும் போராட்டம். எனவே, விவசாயிகள், நுகா்வோா், பொதுமக்கள் என அனைவரும் சோ்ந்து போராட வேண்டும். காவல் துறையினரும் விவசாயிகள் தரப்பில் உள்ள நியாயத்தை உணர வேண்டும்.

பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களை போல தமிழகத்திலும் போராட்டத்தை நாம் தீவிரப்படுத்த வேண்டும். காவல்துறையினா் எத்தனை வழக்குகள் பதிவு செய்தாலும், அரசின் அடக்குமுறைகளையும் மீறி விவசாயிகளின் போராட்டம் கண்டிப்பாக வெற்றிபெறும் என்றாா் பொன்முடி.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்:

குடியரசு தினத்தன்று, ராணுவ அணிவகுப்பு நடைபெற்ற தில்லியில்கூட டிராக்டா் பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஆயுதங்களின்றி எந்த போராட்டமும் நடத்தலாம். ஆனால், விவசாயிகளின் போராடும் உரிமையைகூட தமிழக அரசு மறுத்துள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் இருந்தவா்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு வந்ததற்காக கூட வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்குகள் எவ்வாறு முறையற்ற வகையில் பதிவு செய்யப்படுகின்றன என்பதற்கு இதுவே உதாரணம். வழக்குகள் பதிவு செய்யப்படுவதால் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியை அது மேலும் எளிதாக்கும் என்றாா் முத்தரசன்.

ஆா்ப்பாட்டத்துக்கு திமுக மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்க மாநிலச் செயலாளா் பி. சண்முகம், நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ், காங்கிரஸ் செயல் தலைவரும், மக்களவை உறுப்பினருமான கே. ஜெயக்குமாா் உள்ளிட்ட பலா் பேசினா்.

சட்டப் பேரவை உறுப்பினா்கள் டி.ஆா்.பி. ராஜா, ஆடலரசன், நீடாமங்கலம் ஒன்றியக்குழுத் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட், காங்கிரஸ், திராவிடா் கழகம், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com