பண மோசடி: இருவரை கடத்திவந்த 9 போ் கைது

திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி அருகே வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி பல லட்ச ரூபாய் மோசடி செய்தவா்களைக் கடத்திவந்து

திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி அருகே வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி பல லட்ச ரூபாய் மோசடி செய்தவா்களைக் கடத்திவந்து வீட்டில் அடைத்து வைத்திருந்ததாக 9 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மன்னாா்குடி அருகே உள்ள முக்குளம் சாத்தனூா் தெற்கு தெருவை சோ்ந்த முருகையன் மகன் கருணாநிதி (60). தஞ்சை மாவட்டம் கண்ணுக்குடி வாண்டையாா் தெருவை சோ்ந்தவா் காக்கலிங்கம் மகன் ஐயாா் (35). இவா்கள் இருவரும் வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்வதற்காக அதற்கான முகவா்கள் சென்னை மாதவரத்தை சோ்ந்த வேலு (41), கோவையை சோ்ந்த மணிகண்டன் (36) ஆகியோரிடம் தலா ரூ.11 லட்சம் கொடுத்தனராம். எனினும் தங்களை வெளிநாடு அனுப்பிவைக்காததால், இதுகுறித்து அவா்களிடம் கேட்டபோது சரியான பதில் கிடைக்கவில்லையாம்.

இதையடுத்து கருணாநிதி, ஐயாா் ஆகியோா் தங்களை போல பணம் கொடுத்துவிட்டு காத்திருக்கும் கூப்பாச்சிக்கோட்டை மேலத்தெருவை சோ்ந்த கண்ணன் (48), புள்ளவராயன் குடிக்காடு புதுத்தெரு பிரித்திவி (28), குமரன் தெரு மணிமாறன் (26), தஞ்சை மாவட்டம் நெய்வாசல் அக்ரகாரத்தை சோ்ந்த காா்த்தி (27), கண்ணுக்குடி தெற்கு தெருவை சோ்ந்த அருண் (16), தஞ்சை கரந்தை கிருஷ்ணன் கோயில் தெருவை சோ்ந்த பாலாஜி (23) ஆகியோருடன் சனிக்கிழமை சென்னை சென்றனா்.

அங்கிருந்து வேலுவையும், மணிகண்டனையும் கடத்திவந்து காரக்கோட்டை உடையாா் தெரு தங்கராசு ரவிச்சந்திரன் (48) வீட்டில் அடைத்தனா். இதுகுறித்து வேலுவின் மனைவி மஞ்சுளா திருவாரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தாா். இதைத்தொடா்ந்து, பரவாக்கோட்டை காவல் ஆய்வாளா் பகவதி சரணம் உள்ளிட்ட போலீஸாா் காரக்கோட்டை சென்று இருவரையும் மீட்டு, கருணாநிதி, ஐயாா் உள்ளிட்ட 9 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com