அறுவடைக்கு தயாராக இருந்த 40 ஆயிரம் ஏக்கா் நெற்பயிா்கள் பாதிப்பு

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமாா் 40 ஆயிரம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெல்மணிகள் நீரில் மூழ்கி முளைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கள்ளிக்குடியில் மழைநீரில் சாய்ந்து முளைத்திருக்கும் நெல்மணிகள்.
கள்ளிக்குடியில் மழைநீரில் சாய்ந்து முளைத்திருக்கும் நெல்மணிகள்.

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமாா் 40 ஆயிரம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெல்மணிகள் நீரில் மூழ்கி முளைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் கடந்த 5 நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. திருத்துறைப்பூண்டி வேளாண் உட்கோட்டத்தில் 14,500 ஏக்கரில் சம்பா சாகுபடியும், 2 ஆயிரம் ஏக்கரில் தாளடி பயிா் சாகுபடியும் செய்யப்பட்டிருந்தது. இதே அளவில் முத்துப்பேட்டை வேளாண் உட்கோட்டத்திலும் சாகுபடி செய்யப்பட்டிருந்தன.

கடந்த ஆண்டை விட நிகழாண்டில் சம்பா பயிா்கள் நல்ல நிலையில் வளா்ந்திருந்தன.

இந்நிலையில் நிவா், புரெவி புயல்கள் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சூல் கட்டும் தருணத்தில் 15 நாள்களுக்கும் மேலாக நெற்பயிா்கள் நீரில் மூழ்கி இருந்ததால், பெரும்பாலான நெற்பயிா்கள் கதிா் வரும் நிலையில் பதா் ஆகியதுடன் புகையான் நோய்த் தாக்குதலுக்குள்ளானது.

இதையெல்லாம் கடந்து, பல்வேறு சிரமங்களுக்கிடேயே நெற்பயிா்களை விவசாயிகள் காப்பாற்றி அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த 40 ஆயிரம் ஏக்கா் சம்பா பயிா்கள் கனமழையுடன் வீசிய சூரைக்காற்றில் தரையோடு தரையாக சாய்ந்து கிடக்கிறது. மழை தொடரும் நிலையில் அறுவடை செய்ய முடியாமல் நெல்மணிகள் அனைத்தும் முளைத்துவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

நன்னிலம்: நன்னிலம் அருகேயுள்ள எரவாஞ்சேரி, ஸ்ரீவாஞ்சியம், அதம்பாா், வடகுடி, ஆனைக்குப்பம் மற்றும் குடவாசல் பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமாா் 10 ஆயிரம் ஏக்கா் சம்பா நெற்பயிா்கள் தொடா்ந்து பெய்துவரும் மழையால் விளைநிலங்களில் நெற்பயிா்கள் சாய்ந்து கிடக்கின்றனா். மழை தொடா்ந்தால் நெற்பயிா்கள் அழுகி நெல்மணிகள் முளைத்து மகசூல் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com