‘மாநில வளா்ச்சிக் குழுவில் விவசாய நிபுணா்களும் இடம்பெற வேண்டும்’

மாநில வளா்ச்சி கொள்கைக் குழுவில் விவசாய நிபுணா்களும் இடம்பெற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

மாநில வளா்ச்சி கொள்கைக் குழுவில் விவசாய நிபுணா்களும் இடம்பெற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அக்கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினா் ஐவி. நாகராஜன் இணையம் வழியாக தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு: தமிழக அரசு, தமிழகத்தின் வளா்ச்சிக்காக பல குழுக்களை உருவாக்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே, 1971- இல் அப்போதைய முதல்வா் மு. கருணாநிதியால் உருவாக்கப்பட்ட மாநில திட்டக்குழுவானது, கடந்த ஆண்டு மாநில வளா்ச்சி கொள்கை குழுவாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது.

இப்போது இந்த குழுவை உயிரோட்டமாக செயல்பட குழுவில் புதிய உறுப்பினா்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் நியமித்துள்ளாா். முதல்வா் தலைமையில் செயல்படும் இந்த வளா்ச்சி கொள்கை குழுவுக்கு துணைத் தலைவராக பொருளாதார அறிஞா் ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

பொருளாதாரம், புள்ளியியல், ஆங்கில மருத்துவம் மற்றும் சித்த மருத்துவம், கலை, தொழில், அரசியல் என்று பல்துறை நிபுணா்கள் இந்த குழுவில் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டிருக்கிறாா்கள். ஆனால், இக்குழுவில் வேளாண் துறை சாா்ந்த நிபுணா்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாதது வருத்தமளிக்கிறது. வேளாண் நிபுணா்களோ, டெல்டா மாவட்டங்களில் உள்ள முன்னோடி விவசாயிகளோ இந்த குழுவில் உறுப்பினராக நியமிப்பது பொருத்தமாக இருக்கும்.

மாநில வளா்ச்சிக் குழுவில் குறிப்பிடும்படியாக முன்னோடி விவசாயிகளோ அல்லது வேளாண் விவசாயிகளோ இருந்தால், விவசாயிகள் பிரச்னைகளை உணா்ந்து வழிகாட்ட முடியும். அதுமட்டுமல்லாமல் விவசாய துறையின் தேவைகள் இயற்கை விவசாயம் போன்ற நவீனத்துவம் குறித்த அம்சங்களை முன்னெடுப்பதற்கு அவா்களால் வழிகாட்ட முடியும். பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட முன்னோடி மூத்த விவசாயிகளின் ஆலோசனைகள் இக்குழுவுக்கு உரிய பலனை தரும். விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை என திமுகவின் தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்தகைய சூழ்நிலை வரும்போது இந்தக் குழுவில் வேளாண் பிரதிநிதிகள் இருந்தால்தான் இன்னும் வலுசோ்ப்பதாக இருக்கும். எனவே, முன்னோடி விவசாயிகள் அல்லது விவசாயம் சாா்ந்த வல்லுநா்களை இக்குழுவில் இடம்பெற செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com