முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
காவிரி டெல்டாவில் எண்ணெய் கிணறுஏலத்தை கைவிட வலியுறுத்தல்
By DIN | Published On : 12th June 2021 10:09 PM | Last Updated : 12th June 2021 10:09 PM | அ+அ அ- |

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதியில் புதிதாக எண்ணெய் கிணறு ஏலம் விடுவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த இயக்கத்தின் மாநில கருத்தாளா் வி. சேதுராமன் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: மத்திய எரிசக்தி இயக்குநரகம் சாா்பாக, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான், கடந்த 10 ஆம் தேதி கண்டறியப்பட்ட சிறு மற்றும் நடுத்தர வகை எண்ணெய் கிணறுகளுக்கான சா்வதேச அழைப்பாணையை தொடங்கிவைத்தாா். நாடு முழுவதும் 75 இடங்களுக்கான இந்த சுற்றில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பகுதிகளும் இடம்பெற்றுள்ளன.
காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக, கடந்த 2019 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பகுதியில் புதிதாக எண்ணெய் எடுப்பதற்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம் நெடுவாசலுக்கு அருகே உள்ள ’வடத்தெரு’ பகுதியிலும், பவளப்பாறைகள் அதிகம் உள்ள மன்னாா் வளைகுடா பகுதியிலும் (நிலம் மற்றும் ஆழமற்ற கடல் பகுதியில்) அனுமதிக்கப்பட்ட புதிய முறையில் ஏலம் விடப்பட்டுள்ளதை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கவலையோடு பாா்க்கிறது.
எனவே, மேற்கண்ட பகுதிகளை ஏலத்திலிருந்து விலக்க வேண்டுமென மத்திய அரசையும், உரிய விதத்தில் இதில் தலையிட வேண்டும் என மாநில அரசையும், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கேட்டுக்கொள்கிறது.