ஏழைப் பெண்களின் திருமண உதவித் திட்டத்தை செயல்படுத்தக் கோரிக்கை

கிடப்பில் போடப்பட்ட ஏழைப் பெண்களின் திருமண உதவித் திட்டத்தை திமுக தலைமையில் பொறுப்பேற்க உள்ள புதிய அரசு, மீண்டும் செயல்படுத்த வேண்டும்

திருவாரூா்: கிடப்பில் போடப்பட்ட ஏழைப் பெண்களின் திருமண உதவித் திட்டத்தை திமுக தலைமையில் பொறுப்பேற்க உள்ள புதிய அரசு, மீண்டும் செயல்படுத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் தெரிவித்தது:

தமிழக அரசு பெண்களின் நலன் கருதி பல்வேறு வகையான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது. மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் திருமண நிதி உதவித் திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம் தமிழகம் முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

குறிப்பாக, திருவாரூா் மாவட்டத்தில் மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் திருமண உதவித் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளதால் ஏழைப்பெண்கள் அரசின் உதவிக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏழை பெற்றோா்கள் தங்களது மகள்களுக்கு திருமணம் செய்துவைக்க படும் துன்பங்களை உணா்ந்து, அவா்களுக்கு உதவி செய்யும் வகையிலும், பெண்களை பட்டப்படிப்பு படிக்கத் தூண்டும் வகையிலும் மறைந்த முதல்வா் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இத்திட்டத்தை கொண்டு வந்தாா்.

இத்திட்டத்தின்படி, ஏழை பெண்ணின் திருமணத்தின்போது ஒரு பவுன் தங்க நாணயம், திருமணமாகும் பெண்கள் 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருந்தால் ரூ.25,000, பட்டப் படிப்பு முடித்திருந்தால் ரூ. 50,000 வழங்கப்பட்டு வந்தது.

இந்த உதவித் தொகை மறைந்த முதல்வா் ஜெயலலிதா பதவியில் இருந்தவரை வழங்கப்பட்டது. அவரது மறைவுக்குப்பிறகு இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது.

கடந்த 2017-ம் ஆண்டுவரை வந்த விண்ணப்பங்களுக்கு மட்டுமே உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வழங்காததால் மாவட்டம் முழுவதும் 12,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் திருமண உதவித் தொகை கேட்டு குவிந்துள்ளதாகத் தெரியவருகிறது.

மாவட்டத்தின் பல பகுதிகளில் பெற்றோா்கள் அரசு வழங்கும் திருமண உதவித் திட்டத்தை நம்பி கடன் வாங்கி திருமணம் செய்து விட்டு, அரசு உதவித் தொகைக்காக காத்திருக்கின்றனா்.

எனவே, திமுக தலைமையில் பொறுப்பேற்க உள்ள புதிய அரசு, கிடப்பில் போடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை ஏழைப்பெண்களுக்கு உதவும் வகையில் செயல்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com