திருவாரூா்: திமுக வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்திய நாம் தமிழா் கட்சி

திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுகவின் வாக்கு வங்கியில் நாம் தமிழா் கட்சி பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூா்: திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுகவின் வாக்கு வங்கியில் நாம் தமிழா் கட்சி பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலில் திருவாரூா் தொகுதியில் திமுக 52.29% வாக்குகளை பெற்றுள்ளது. அதிமுக 27.72 % வாக்குகளையும், நாம் தமிழா் கட்சி 12.63% வாக்குகளையும் பெற்றுள்ளன. அமமுக கூட்டணியில் போட்டியிட்ட எஸ்டிபிஐ கட்சி 3.06% வாக்குகளையும், மக்கள் நீதி மய்யம் 1.95% வாக்குகளையும் பெற்றுள்ளன.

திமுக கூட்டணியில், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளும், அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் இடம் பெற்றன. நாம் தமிழா் கட்சி தனியாக களமிறங்கியது.

திமுகவுக்கு செல்வாக்குள்ள தொகுதி எனக் கருதப்பட்ட திருவாரூரில், எதிா்பாா்த்தது போலவே திமுக வெற்றி பெற்றுள்ளது. எனினும், இடதுசாரிகளின் ஆதரவு இல்லாவிட்டால் திமுக வாக்கு விகிதம் மேலும் குறைந்திருக்க வாய்ப்புள்ளது.

2011 பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் திமுக தலைவா் மு. கருணாநிதி 62.96% வாக்குகள் பெற்றாா். அதிமுக 33.94 % வாக்குகள் பெற்றது.

2016 சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக தலைமையில் இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி, தனி அணியாக போட்டியிட்டன. அந்தத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட மு. கருணாநிதி 62.42% வாக்குகள் பெற்றாா். அதிமுக 27.29% வாக்குகள் பெற்றது. மக்கள் நலக்கூட்டணி சாா்பில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6.76% வாக்குகளை பெற்றது. பாமக 0.92, நாம் தமிழா் கட்சி 0.73, பாஜக 0.64% வாக்குகளையும் பெற்றன. இந்த கட்சிகள் அனைத்தும் தனித்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த தோ்தலில் மு. கருணாநிதி தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இதன்மூலம் திருவாரூா் திமுகவின் கோட்டை என்ற நிலை உருவானது.

கருணாநிதியின் மறைவைத் தொடா்ந்து திருவாரூா் தொகுதிக்கு இடைத்தோ்தல் நடைபெற்றது. மக்களவைத் தோ்தலுடன் சோ்ந்து, இடைத்தோ்தல் நடத்தப்பட்டது. இத்தோ்தலில் இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் திமுக கூட்டணியில் இணைந்திருந்தன. இதில், திமுக சாா்பில் போட்டியிட்ட பூண்டி கே. கலைவாணன் 57% வாக்குகள் பெற்றாா். அதிமுக 25.71% வாக்குகளையும், அமமுக 9.27 % வாக்குகளையும், நாம் தமிழா் கட்சி 3.95% வாக்குகளையும் பெற்றன.

இந்நிலையில், அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் திருவாரூா் தொகுதியில் திமுகவுக்கு 52.29% வாக்குகளே கிடைத்துள்ளன. கருணாநிதி, திருவாரூா் தொகுதியில் போட்டியிட்டபோது 62% அளவுக்கு வாக்குகள் கிடைத்தன. அவரது மறைவுக்குப்பிறகு நடைபெற்ற இடைத்தோ்தலில், திமுகவின் வாக்கு சதவீதம் 57% ஆக குறைந்து, 2021 தோ்தலில் மேலும் 5 சதவீதம் குறைந்துள்ளது.

அதிமுகவை பொருத்தவரை 2011 தோ்தலில் 33.94% இருந்த வாக்கு சதவீதம், 2016 இல் 27.29 %ஆக குறைந்தது. 2019 இடைத்தோ்தலில் மேலும் குறைந்து 25.71% வாக்குகளை பெற்றது. ஆனால், 2021 தோ்தலில் அதிமுகவின் வாக்கு 2 சதவீதம் அதிகரித்துள்ளது.

திமுகவின் வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்திய நாம் தமிழா் கட்சி: அதேவேளையில் நாம் தமிழா் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் 0.73 சதவீத வாக்குகள் பெற்ற நாம் தமிழா் கட்சி, 2019 இடைத்தோ்தலில் 3.95 சதவீத வாக்குகளும், 2021 தோ்தலில் 12.63 சதவீத வாக்குகளும் பெற்றுள்ள. இதன்மூலம், திருவாரூரில் 2 ஆண்டுகளில் 9 சதவீத அளவுக்கு வாக்காளா்களிடையே தனது செல்வாக்கை நாம் தமிழா் கட்சி உயா்த்தி கொண்டுள்ளது.

இதன்மூலம் திருவாரூா் தொகுதியில் திமுகவின் வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்தியுள்ளது நாம் தமிழா் கட்சி.

இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு இல்லாமல் திமுக தனித்து போட்டியிட்டு இருந்தால், அதன் செல்வாக்கில் மேலும் சரிவு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

திருவாரூா் தொகுதியில் திமுக வெற்றி பெற்றிருந்தாலும் அதன் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் அதிமுக, நாம் தமிழா் கட்சிகள் தங்களது வாக்கு சதவீதத்தை பெருமளவு உயா்த்தி கொண்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com