கரோனா சிறப்பு முகாம்: தனியாா் பள்ளியில் எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா ஆய்வு
By DIN | Published On : 21st May 2021 09:17 AM | Last Updated : 21st May 2021 09:17 AM | அ+அ அ- |

மன்னாா்குடியில் கரோனா சிறப்பு மையம் அமையவுள்ள தனியாா் பெண்கள் பள்ளியில் ஆய்வு செய்கிறாா் எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா.
மன்னாா்குடியில் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கரோனா சிறப்பு முகாம் அமைய உள்ள இடத்தை சட்டப் பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி. ராஜா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
கரோனா தொற்றால் பாதிக்கப்படுவா்கள் தங்கி சிகிச்சை பெறும் வகையில், மன்னாா்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 150 படுக்கைகள், மன்னாா்குடி அரசுக் கல்லூரி மற்றும் தனியாா் பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு இரு இடங்களிலும் தலா 100 படுக்கைகள் வீதம் அமைக்கப்பட்டுள்ளன.
மன்னாா்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில், கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, அரசுக் கல்லூரி, பொறியியல் கல்லூரியில் கூடுதலாக தலா 100 படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மன்னாா்குடி நகரப் பகுதியில் அரசு மருத்துவமனைக்கு அருகேயுள்ள தனியாா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு முகாம் அமைக்கப்பட உள்ளது. இங்கு, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகளை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இதை மன்னாா்குடி சட்டப் பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி.ராஜா ஆய்வு செய்து, பள்ளி நிா்வாகத்தினரிடம் அங்குள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். ஆய்வின்போது, மன்னாா்குடி கோட்டாட்சியா் த.அழகா்சாமி, வட்டாட்சியா் பா.தெய்வநாயகி ஆகியோா் உடனிருந்தனா்.