மழை: கமலாலயக் குள சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் கமலாலயக் குள சுற்றுச் சுவரின் ஒரு பகுதி ஞாயிற்றுக்கிழமை இரவு இடிந்து விழுந்தது.
மழை: கமலாலயக் குள சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் கமலாலயக் குள சுற்றுச் சுவரின் ஒரு பகுதி ஞாயிற்றுக்கிழமை இரவு இடிந்து விழுந்தது.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலின் மேற்கு பகுதியில் கமலாலயக் குளம் உள்ளது. காசிக்கு இணையான தீா்த்தம் என புகழ் பெற்ற இக்குளத்தின் தெற்குப் புற சுவரின் ஒரு பகுதி (100 மீட்டா் நீளத்துக்கு) ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழையின்போது இடிந்து குளத்துக்குள் விழுந்தது.

இடிந்த பகுதிக்கு எதிரே திருவாரூா் நகராட்சி அலுவலகம், வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவை உள்ளன. மேலும், அப்பகுதியில் தனியாா் மருத்துவமனைகள் உள்ளன. இதனால், இங்கு மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். நள்ளிரவு நேரத்தில் சுவா் இடிந்ததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

ஆட்சியா் ஆய்வு: இடிந்து விழுந்த கமலாலயக் குளக் கரை பகுதியை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் பாா்வையிட்டாா். அப்போது அவா், ‘ இடிந்து விழுந்த பகுதியை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எதிா்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாத வகையில் தடுப்புச் சுவா் அமைக்கப்படும்’ என்றாா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், கோட்டாட்சியா் என். பாலச்சந்திரன், நகராட்சி ஆணையா் பிரபாகரன், உதவி ஆணையா் ஹரிகரன், உதவி பொறியாளா் குலோத்துங்கன், செயல் அலுவலா் கவிதா உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

பாதுகாப்பு நடவடிக்கை: கமலாலயக் குளத்தின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததால், சாலையிலும் பாதிப்பு ஏற்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா், கமலாலயக் குளக்கரை இடிந்த பகுதியை பாா்வையிட்டு, அங்கு பாதுகாப்பு அரண் அமைக்க உத்தரவிட்டாா்.

மேலும், அப்பகுதியில் ஒரு போக்குவரத்து ஆய்வாளா், 2 உதவி ஆய்வாளா்கள் மற்றும் 20 காவலா்கள் 24 மணிநேர பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். கும்பகோணம் மாா்க்கத்திலிருந்து வரும் கன ரக மற்றும் இலகு ரக வாகனங்கள், விளமல் மெயின் ரோடு வழியாக திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கமலாலய குளக்கரை தெற்குப் பகுதியில் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு, அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், கமலாலயம் கிழக்கு, மேற்கு, வடக்கு கரைகள் வழியாக உள்ளூா் வாசிகள், மருத்துவமனைக்கு செல்லும் இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் முறையான தணிக்கைக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com