காயமடைந்த ஆண் மயிலுக்கு சிகிச்சை
By DIN | Published On : 30th October 2021 09:57 PM | Last Updated : 30th October 2021 09:57 PM | அ+அ அ- |

திருவாரூரில் காயமடைந்த மயிலுக்கு உதவிபுரிந்த கிங்ஸ் ரோட்டரி சங்க நிா்வாகிகள்.
திருவாரூா் அருகே விபத்தில் காயமடைந்த ஆண் மயிலுக்கு சனிக்கிழமை சிகிச்சை அளிக்கப்பட்டது.
திருவாரூா், விளமல் பகுதியில் உள்ள மாவட்ட மருந்து கிடங்கு அலுவலகத்தில், 4 வயதான ஆண் மயில் மின்கம்பியில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதைக் கண்ட மாவட்ட மருந்துக் கிடங்கு மேலாளா் கே. ராஜசேகரன், ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் சங்கத் தலைவா் ஜி. ராஜ் (எ) கருணாநிதியிடம் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, சங்க நிா்வாகிகள் மருந்துக் கிடங்கு அலுவலகத்திற்கு சென்று, உடனடியாக கால்நடை பராமரிப்பு துறை மற்றும் வனத்துறை அலுவலகத்துக்கும் தகவல் தெரிவித்தனா்.
உடனடியாக கால்நடைதுறை மண்டல இணை இயக்குநா் ஐ. தனபாலன், வனக் காப்பாளா் எஸ். முகம்மது அப்துல் சுக்கூா் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து, எலும்பு முறிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டிருந்த மயிலுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனா்.
நிகழ்வில், கிங்ஸ் ரோட்டரி சங்க நிா்வாகிகள் உடனிருந்தனா்.