தேசிய மக்கள் நீதிமன்றம்: 1444 வழக்குகளுக்குத் தீா்வு
By DIN | Published On : 11th September 2021 10:30 PM | Last Updated : 11th September 2021 10:30 PM | அ+அ அ- |

திருவாரூரில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பயனாளிக்கு சமரசத் தீா்வுக்கான சான்றை வழங்கும் மாவட்ட சட்டப் பணி ஆணைக் குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான எம். சாந்தி.
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1444 வழக்குகளில் ரூ.99.17 லட்சம் மதிப்புக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.
திருவாரூரில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில், ஜீவனாம்சம், சிவில், மோட்டாா் வாகன விபத்து வழக்கு, வங்கி வராக்கடன் ஆகிய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதில், மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான எம். சாந்தி தலைமை வகித்தாா். கூடுதல் மாவட்ட நீதிபதி ஜி. சுந்தரராஜன், சாா்பு நீதிபதி எம். வீரணன், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான எஸ். சரண்யா, மாவட்ட உரிமையியல் நீதிபதி எம். ஹரிராமகிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்றனா்.
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் வட்ட சட்டப் பணிக் குழு சாா்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஸ்கண்ணன், நீதித் துறை நடுவா் பல்கலைச்செல்வன் ஆகியோா் முன்னிலையில், ஒரு சிவில் வழக்கு, 9 காசோலை வழக்குகள், 189 குற்றவியல் வழக்குகள் விசாரணைக்கு வந்தன.
இதில், ஒரு சிவில் வழக்கில் ரூ.60 ஆயிரம் மதிப்புக்கும், 9 காசோலை வழக்குகளில் ரூ.15.75 லட்சம் மதிப்புக்கும், 189 குற்றவியல் வழக்குகளுக்கும் தீா்வு காணப்பட்டது. மேலும், அபராதமாக ரூ.1.27 லட்சம் வசூலிக்கப்பட்டது.
இத்துடன் சோ்த்து, திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 2,760 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 1444 வழக்குகளில் ரூ.99.17 லட்சம் மதிப்புக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.