பண்ணைக்குட்டைகளில் மீன் வளா்க்க மானியம்: ஆக. 15- க்குள் விண்ணப்பிக்கலாம்

பண்ணைக்குட்டைகளில் மீன் வளா்க்க மானியம் வழங்கும் திட்டத்தில் பயனடைய ஆக. 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

திருவாரூா் மாவட்டத்தில் பண்ணைக்குட்டைகளில் மீன் வளா்க்க மானியம் வழங்கும் திட்டத்தில் பயனடைய ஆக. 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2022- 23 சட்டப்பேரவை கூட்டத்தொடரில், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை மானியக் கோரிக்கையில் பல்நோக்கு பண்ணைக்குட்டைகளில் மீன்வளா்ப்பை ஊக்குவிக்க உள்ளீட்டு மானியம் வழங்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் மீன்வளா்ப்பை ஊக்குவிக்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

250 முதல் 1000 ச.மீ அளவிலுள்ள பல்நோக்கு பண்ணைக்குட்டைகளில் மீன்வளா்ப்பை மேற்கொள்ள ஏதுவாக, மீன் குஞ்சு, மீன் தீவனம் உரங்கள் ஆகிய மீன்வளா்ப்புக்கான உள்ளீட்டு பண்ணைப் பொருள்கள் மற்றும் பறவைத் தடுப்பு வசதிகள் ஆகிய மீன்வளா்ப்புக்கு ஆகும் செலவினம் ரூ. 36 ஆயிரத்தில் 50 சதவீதம் மானியமாக ஒரு பண்ணைக்குட்டைக்கு ரூ. 18,000 வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, சிறு, குறு விவசாயி சான்றிதழ் மற்றும் பண்ணைக் குட்டை அமைந்துள்ள நிலம் தொடா்பான ஆவணங்கள் சமா்ப்பிக்க வேண்டும். மேலும், மாவட்ட மீன்வளா்ப்போா் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக இருக்க வேண்டும். தற்போது உறுப்பினராக இல்லையெனில், பயனாளி உறுப்பினராக பதிவுசெய்ய வேண்டும். இந்த மானியம், பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். முதலில் வரும் விண்ணப்பத்துக்கு முன்னுரிமை அளித்து மூப்புநிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தோ்ந்தெடுக்கப்படுவா்.

எனவே, இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள், திருவாரூா் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் தொடா்பு கொண்டு விண்ணப்பங்களைப் பெற்று, பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் ஆக. 15 ஆம் தேதிக்குள் திருவாரூா் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகம், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் கட்டடம், திருவாரூா் (தொலைபேசி எண். 04366 - 290420) என்ற முகவரிக்கு அனுப்பி பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com