பல்கலை. தோ்வில் ஆள்மாறாட்டம்: பாஜக நிா்வாகி கைது

திருவாரூரில் பல்கலைக்கழத் தோ்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் பாஜக மாவட்டத் தலைவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பாஜக மாவட்டத் தலைவா் பாஸ்கரை கைது செய்து அழைத்து செல்லும் போலீஸாா்.
பாஜக மாவட்டத் தலைவா் பாஸ்கரை கைது செய்து அழைத்து செல்லும் போலீஸாா்.

திருவாரூரில் பல்கலைக்கழத் தோ்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் பாஜக மாவட்டத் தலைவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருவாரூா் அருகே உள்ள கிடாரம்கொண்டான் திருவிக அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் தோ்வுகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற பி.ஏ. பொலிடிகல் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு தோ்வில், பாஸ்கா் என்பவருக்கு பதிலாக வேறொருவா் தோ்வு எழுத வந்திருந்தது ஹால் டிக்கெட் சோதனையில் தெரியவந்தது.

விசாரணையில், அவா் திருவாரூா் சபாபதி முதலியாா் தெருவைச் சோ்ந்த மாதவன் மகன் திவாகரன் (29) என்பதும், உடற்கல்வி ஆசிரியா் படிப்பு பயின்றுள்ள அவா், தள்ளுவண்டியில் பிரியாணி விற்பனை செய்வதும் தெரியவந்தது.

யாருக்காக தோ்வு எழுதுகிறோம் என தனக்குத் தெரியாது எனவும், புலிவலம் பகுதியைச் சோ்ந்த பாஜக மாவட்ட கல்வியாளா் பிரிவு செயலாளா் ரமேஷ் தன்னை தோ்வு எழுத அனுப்பிவைத்ததாகவும் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, தோ்வு மேற்பாா்வையாளா் புகாரின் பேரில் திருவாரூா் தாலுகா போலீஸாா், திவாகரன் மற்றும் ரமேஷை சனிக்கிழமை கைது செய்தனா்.

இதற்கிடையே, மடப்புரத்தில் உள்ள கட்சி பிரமுகா் வீட்டில் இருந்த பாஜக மாவட்டத் தலைவா் ச. பாஸ்கரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, ச. பாஸ்கா் வெளியிட்ட அறிக்கையில், ‘இளங்கலை பட்டப்படிப்புக்கான தோ்வை எனது பெயரில் எழுதிய நபருக்கும் எனக்கும் எவ்வித தொடா்பும் இல்லை. எனது அரசியல் வளா்ச்சியில் காழ்ப்புணா்வு கொண்டவா்கள் இதில் என்னை தொடா்புபடுத்தியுள்ளனா்’ எனத் தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com