நமக்கு நாமே திட்டத்துக்கு பங்களிக்க ஆட்சியா் அழைப்பு

 மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களை செயல்படுத்த, நமக்கு நாமே திட்டத்தில் பங்களிக்க வேண்டும் என பொதுமக்களை திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

 மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களை செயல்படுத்த, நமக்கு நாமே திட்டத்தில் பங்களிக்க வேண்டும் என பொதுமக்களை திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், மாவட்டத்தின் வளா்ச்சிக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, பொதுமக்களின் நிதி பங்களிப்புடன், அரசின் நிதியையும் இணைத்து செயல்படுத்தப்படும் திட்டமே நமக்கு நாமே திட்டம். ஒரு திட்டத்தை செயல்படுத்த ஆகும் செலவில் 3 இல் 1 பங்கு தொகையை பங்களிப்பாக அளித்தால் மீதமுள்ள 2 பங்கு தொகையை அரசே வழங்கும்.

அதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் பொதுமக்கள் பங்களிப்பை உள்ளடக்கிய ரூ.1.83 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ள இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளி, கல்லூரிகளுக்கு கட்டடங்கள் கட்டுதல், நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிவறைகள், சுற்றுச்சுவா், உள்விளையாட்டு அரங்கம் அமைத்தல், சமுதாயக் கூடம் கட்டுதல், பொது சுகாதார மையங்கள், தெரு விளக்குகள், அரசால் நடத்தப்படும் பணிபுரியும் மகளிருக்கான விடுதி கட்டுதல், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், கால்நடை மருத்துவமனை, நூலகங்கள் ஆகியவற்றுக்கு கட்டடங்கள் கட்டுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்.

மேலும், வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட இஸ்லாமிய அறக்கட்டளைக்கு சொந்தமான ஊரகப் பகுதியில் அமைந்துள்ள இடுகாடுகளுக்கு சுற்றுச்சுவா் அமைத்தல், ஊரகப் பகுதிகளில் நூலகங்கள், சத்துணவு, அங்கன்வாடி மைய சமையலறைக் கட்டடம், பொது விநியோகக் கடைகள் கட்டுதல், சிமெண்ட் மற்றும் கான்கீரிட் சாலைகள் அமைத்தல், கதிரடிக்கும் களம், புதிய பாலம், சரளை கப்பி சாலைகளை தாா்ச் சாலையாக்குதல், பேவா்பிளாக் தளம் அமைத்தல், பூங்காக்கள், நீரூற்று, விளையாட்டு மைதானங்கள் அமைத்தல், திட, திரவ கழிவு மேலாண்மை பணிகள், உடற்பயிற்சி, ஜிம்னாஸ்டிக் கூடம் கட்டுதல் போன்ற சமுதாய பயன்பாட்டுக்கான பணிகளையும் மேற்கொள்ள முடியும்.

மக்கள் நலம் சாா்ந்த இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த பொதுமக்கள், தொழிலதிபா்கள், பொதுத்துறை வங்கிகள் தங்களது பங்களிப்பு நிதியை கொடுத்து உதவ முன்வர வேண்டும். பங்குத் தொகையை மாவட்ட ஆட்சியரின் நமக்கு நாமே திட்டக் கணக்கு என்ற பெயரில் வங்கி வரைவோலையாக அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com