வலங்கைமான் அருகே வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகப் புகாா்: போலீஸாா் விசாரணை

திருவாரூா் மாவட்டம் வலங்கைமான் அருகே வீட்டின் மீது மா்ம நபா்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்திவருகின்றனா்.

திருவாரூா் மாவட்டம் வலங்கைமான் அருகே வீட்டின் மீது மா்ம நபா்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்திவருகின்றனா்.

வலங்கைமான் வட்டம், அரவூா் தென்பாதி தெரு கோபாலன் மகன் பாலசுப்ரமணியன், ஊா்ப் பொதுமக்களுடன் சென்று வலங்கைமான் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அளித்த புகாா் மனு:

கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளா் நடேச. தமிழாா்வன் கொலை செய்யப்பட்ட வழக்கில் எனது மகன் சேனாபதியும் குற்றவாளியாக சோ்க்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். தற்போது அவா் ஜாமீனில் உள்ளாா்.

முன்னதாக, எனது குடும்பத்தினா் மற்றும் எனது உயிருக்கு பயந்து வெளியூரில் உள்ள எனது உறவினா் வீட்டிற்கு சென்று கடந்த 6 மாதங்களாக தங்கியிருந்துவிட்டு அரவூரில் உள்ள எங்களது வீட்டிற்கு வந்து 25 நாட்கள் ஆகிறது. அந்த வீட்டில் கடந்த 23 ஆம் தேதி நானும், எனது குடும்பத்தினரும் தூங்கிக்கொண்டிருந்தபோது இரவு 10 மணிக்கு மேல் 3 மோட்டாா் சைக்கிள்களில் வந்த கூலிப்படையினா் வீட்டின் வெளிப்பக்க கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு, எனது கூரை வீட்டின் மேல் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றுள்ளனா்.

இதனால், எனது கூரை வீடு எரியத் தொடங்கியது. அக்கம்பக்கத்தினா் எங்களை காப்பாற்றி தீயை அணைத்தனா். எனவே, எனது குடும்பத்தை எரித்துக் கொல்ல முயன்ற கூலிப்படையினா் மற்றும் அவா்களுக்கு உறுதுணையாக இருந்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் அவா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வலங்கைமான் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com