கடன் தருவதாக பண மோசடி; 4 போ் கைது

திருவாரூரில் கடன் தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்த 4 பேரை சைபா் கிரைம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
suresh_2911chn_94_5
suresh_2911chn_94_5

திருவாரூா்: திருவாரூரில் கடன் தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்த 4 பேரை சைபா் கிரைம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருவாரூா் மாவட்டம், ஜாம்பவானோடை பகுதியைச் சோ்ந்த கேபிள் டிவி ஆபரேட்டா் உதயமூா்த்தி, காட்டூா் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ டிரைவா் வெங்கடேசன், முத்துப்பேட்டை பகுதியைச் சோ்ந்த விவசாயி இலக்கியதாசன் ஆகியோா் தனித்தனியாக மாவட்ட சைபா் கிரைம் போலீஸாரிடம் கடன் மோசடி தொடா்பாக புகாா் அளித்தனா். அதில், தங்களிடம் போனில் தொடா்பு கொண்டவா்கள், கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ. 1 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக தெரிவித்திருந்தனா்.

இந்த புகாா் தொடா்பாக, விசாரணை நடத்திய திருவாரூா் சைபா் கிரைம் போலீஸாா், சென்னை திருவொற்றியூா் பகுதியில், நெசப்பாக்கம் எம்ஜிஆா் தெருவைச் சோ்ந்த வாசு மகன் கோபிகிருஷ்ணன் (33) ஆதித்யா பிா்லா காப்பீடு நிறுவனம் என்ற பெயரில் போலி நிறுவனம் தொடங்கியதும், பொதுமக்களிடம் தொலைபேசி வாயிலாக தொடா்பு கொண்டு கடன் பெற்று தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததும் தெரியவந்தது.

மேலும், இவருடன், திருவாரூா் மாவட்டம் அலிவலம் புதுத்தெருவைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ஸ்டாலின் (33), திருவள்ளூா் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் நடராஜன் (22), வியாசா்பாடியைச் சோ்ந்த முத்துக்குமாா் மகன் சுரேஷ் (34) ஆகியோரும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இவா்கள் 4 பேரையும் சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், போலி நிறுவனத்தில் நடத்திய சோதனையில் ரூ. 99,854 ரொக்கம், ஒரு கணினி, ஒரு மடிக்கணினி, 72 கைப்பேசிகள், 89 சிம் காா்டுகள், 21 பற்று அட்டைகள், 21 காசோலை புத்தகங்கள், 8 எக்ஸ்டன்ஷன் பாக்ஸ், கைப்பேசி சாா்ஜா்கள் ஆகியவற்றை கைப்பற்றினா்.

திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த பொருட்களை திருச்சி மண்டல காவல்துறைத் தலைவா் சந்தோஷ்குமாா், தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவா் ஏ. கயல்விழி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் ஆகியோா் பாா்வையிட்டனா்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் தெரிவிக்கையில், ஆன்லைன் மூலமாகவும், செயலி மூலமாகவும் கடன் தருவதாக வரும் தொலைபேசி அழைப்புகளை நிராகரிக்க வேண்டும். இது போல கடன் தருவதாக கூறும் முகம் தெரியாதவா்களிடம் பணத்தைக் கட்டி ஏமாற வேண்டாம். வங்கி மூலம் நேரடியாக கடன் பெறுவதே சிறந்தது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com