தேவைப்படும் இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள்

தேவைப்படும் இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி.
கிடாரங்கொண்டான் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் ஆய்வு செய்த அமைச்சா் அர. சக்கரபாணி.
கிடாரங்கொண்டான் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் ஆய்வு செய்த அமைச்சா் அர. சக்கரபாணி.

தேவைப்படும் இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி.

திருவாரூா் மாவட்டம், எண்கண் பகுதியிலுள்ள வெட்டாறு கதவணை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் கிடாரங்கொண்டான் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கு ஆகியவற்றை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த பின் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தமிழகம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் 103 திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்படுகின்றன. அவ்வாறு சேமிக்கும் நெல்லை பாதுகாக்க முதற்கட்டமாக ரூ. 238.07 கோடியில் சுமாா் 2.86 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், திருவாரூா் மாவட்டம், குடவாசல் அருகே புதுக்குடியில் ரூ. 4.69 கோடியில் 4,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு, முடிகொண்டானில் ரூ.7.68 கோடியில் 7 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு, திருவாரூா் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ரூ. 4.38 கோடியில் 7,250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு என சுமாா் 18,750 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல, தஞ்சை, திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூா், கடலூா் ஆகிய மாவட்டங்களில் கூடுதலாக நெல் சேமிப்பு கிடங்குகள் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதுரை மாவட்டம் கப்பலூரில் 18 ஆயிரம் மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கும், திருமங்கலத்தில் 3,500 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கும் கட்ட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

மேட்டூா் அணையிலிருந்து வரும் நீா் கடலில் கலக்கும் வழியிலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியா்களும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். மேலும், நெல் மூட்டைகள் மழையில் நனையாதவாறு தாா்ப்பாய்கள் கொண்டு பாதுகாக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளாா். விவசாயிகளின் பயிா்க் காப்பீட்டுக்காக தமிழக அரசு செலுத்த வேண்டிய காப்பீட்டுத் தொகையான ரூ. 2,057 கோடியை விடுவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து நெல்லை, திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்குக்கு எடுத்துச் செல்லாமல் நேரடியாக அரவை ஆலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு தேவைப்படும் அனைத்து இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், எம்எல்ஏ. பூண்டி கே. கலைவாணன், மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்ரமணியன், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநா் ராஜாராமன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சித்ரா, பொதுப்பணித் துறை வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளா் முருகவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com