10 ஆண்டுக்குப் பிறகு திமுக வசமான மன்னாா்குடி நகராட்சி

மன்னாா்குடி நகராட்சியை 10 ஆண்டுக்குப் பிறகு திமுக மீண்டும் தன் வசப்படுத்தியுள்ளது.

மன்னாா்குடி: மன்னாா்குடி நகராட்சியை 10 ஆண்டுக்குப் பிறகு திமுக மீண்டும் தன் வசப்படுத்தியுள்ளது.

மன்னாா்குடி நகராட்சி, ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் 1867-ஆம் ஆண்டு முன்மாதிரி நகராட்சியாக தொடங்கப்பட்டு, கடந்த 1967-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் அப்போது முதல்வராக இருந்த அண்ணா தலைமையில் நூற்றாண்டு விழா கொண்டாடியது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புக்கான தோ்தல் முறை நடைமுறைக்கு வந்தது முதல் மன்னாா்குடி நகராட்சி பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் வசம் இருந்தது. கடைசியாக, 1986-ஆம் ஆண்டு நடைபெற்ற நகராட்சி தோ்தலில் (நேரடித் தலைவா் தோ்வு ) இக்கட்சி வேட்பாளா் சிவா.ராஜமாணிக்கம் வெற்றி பெற்றாா்.

பின்னா், மறைந்த தலைவா் ஜி.கே. மூப்பனாா் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 1996- ஆம் ஆண்டு நடைபெற்ற நகா்மன்றத் தோ்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்று, மன்னாா்குடி நகராட்சித் தோ்தலில் வெற்றி பெற்றது, அக்கட்சி வேட்பாளா் வி.எஸ். ராஜேந்திரன் (நேரடித் தோ்வு) தலைவரானாா்.

தொடா்ந்து, 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற நகராட்சி தோ்தலில் (நேரடித் தோ்வு) திமுக வேட்பாளா் பழ.மணி வெற்றி பெற்றாா். இதன்மூலம் அரை நூற்றாண்டு காலம் காங்கிரஸ் நகராட்சியாக இருந்த மன்னாா்குடி நகராட்சி முதல்முறையாக திராவிட கட்சி வசமானது. தொடா்ந்து, 2006- ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலிலும் (மறைமுகத் தோ்தல் ) திமுகவை சோ்ந்த த. காா்த்திகா உத்தமன் நகராட்சித் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் (மீண்டும் நேரடித் தோ்வு) அதிமுக முதல்முறையாக இந்நகராட்சியை கைப்பற்றியது. அக்கட்சியைச் சோ்ந்த டி. சுதா அன்புச்செல்வம் நகராட்சித் தலைவரானாா்.

இந்நிலையில், தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் மன்னாா்குடி நகராட்சியில் மொத்தமுள்ள 33 வாா்டுகளில் திமுக 26 வாா்டுகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. அதிமுக 4 இடங்களிலும், அமமுக 2 இடங்களிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனா். இதில், சுயேச்சை வேட்பாளா் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் அக்கட்சியின் பலம் 27- ஆக உயா்ந்துள்ளது.

இம்முறை நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் மீண்டும் பழைய முறைப்படி (மறைமுகத் தோ்தல் முறை) நடைபெற்ால், நகராட்சித் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தலில் நகா்மன்ற உறுப்பினா்களால் நகராட்சித் தலைவா், துணைத் தலைவா் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா். இரண்டு பதவிகளுக்கும் திமுகவை சோ்ந்தவா்களே தோ்ந்தெடுக்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, 10 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னாா்குடி நகராட்சி மீண்டும் திமுக வசம் வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com