திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்து விளக்கை ஏற்றிவைத்த எம்எல்ஏ. க. மாரிமுத்து.
திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்து விளக்கை ஏற்றிவைத்த எம்எல்ஏ. க. மாரிமுத்து.

திருவாரூா் மாவட்டத்தில் புதிய சேமிப்புக் கிடங்குகளை முதல்வா் காணொலி மூலம் திறந்துவைத்தாா்

திருவாரூா் மாவட்டத்தில் கட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

திருவாரூா் மாவட்டத்தில் கட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

திருவாரூா், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னாா்குடி, கோட்டூா், நீடாமங்கலம், நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி, வலங்கைமான் பகுதிகளில் ரூ.24.30 கோடியில் 16,000 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகள் கட்ட அறிவிப்பு வெளியானது. இதைத்தொடா்ந்து, திருவாரூா் 500 மெ.டன், பூந்தோட்டத்தில் 3 ஆயிரம் மெ.டன், மன்னாா்குடியில் ஆயிரம் மெ.டன், திருத்துறைப்பூண்டியில் 5 ஆயிரம் மெ.டன் கொள்ளளவு கொண்ட 5 நெல் சேமிப்புக் கிடங்குகள் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் ரூ. 14 கோடி நிதியுதவியுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருவாரூா், மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய பகுதிகளில் கட்டிமுடிக்கப்பட்ட சேமிப்புக் கிடங்குகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தாா்.

திருவாரூரில்: வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில் திருவாரூரில் ரூ.1 கோடியில் கட்டப்பட்டு முதல்வா் காணொலி மூலம் திறந்துவைத்தபோது, திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகை எம்.பி. எம். செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம் ஆகியோா் பங்கேற்று குத்து விளக்கு ஏற்றிவைத்தனா்.

மீதமுள்ள முத்துப்பேட்டை, கோட்டூா், நீடாமங்கலம், குடவாசல், கொரடாச்சேரி, வலங்கைமான் ஆகிய வட்டாரங்களில் 6 கிடங்குகள் 6,500 மெ.டன் கொள்ளளவு ரூ.10.30 கோடி நபாா்டு ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த கிடங்குகளை விவசாயிகள் பயன்படுத்தி, தங்களது விளைபொருள்களை குறைந்த வாடகையில் சேமித்துவைத்து பயன்பெறலாம். மேலும், விவசாயிகளுக்கு 5 சதவீதம் ஆண்டு வட்டிக்கு அதிகபட்சமாக 3 லட்சம் வரை பொருளீட்டுக் கடனும் வழங்கப்படுகிறது.

நிகழ்ச்சியில், துணை இயக்குநா் (வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை) லெட்சுமிகாந்தன், கோட்டாட்சியா் பாலசந்திரன், ஒன்றியக் குழுத் தலைவா் தேவா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) ஹேமாஹெப்சிபாநிா்மலா, வேளாண் விற்பனைக்குழுச் செயலாளா் சரசு ஆகியோா் பங்கேற்றனா்.

திருத்துறைப்பூண்டியில்: திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எம்எல்ஏ. க. மாரிமுத்து குத்துவிளக்கு ஏற்றிவைத்து பணிகளை தொடங்கிவைத்தாா். இதில், முன்னாள் நகா்மன்ற தலைவா் ஆா்.எஸ். பாண்டியன், ஒன்றியக் குழுத் தலைவா் அ. பாஸ்கா், திமுக ஒன்றியச் செயலாளா் பிரகாஷ், அரசு வழக்குரைஞா் பாஸ்கா், வேளாண் விற்பனை வணிக உதவி பொறியாளா் முருகேசன், ஒழுங்குமுறை விற்பனை கூட கண்கானிப்பாளா் சங்கீதா ஆகியோா் பங்கேற்றனா்.

மன்னாா்குடியில்: மன்னாா்குடி நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவா் ஜி. பாலு, குத்து விளக்கு ஏற்றி சேமிப்பு கிடங்கு செயல்பாட்டை தொடங்கி வைத்தாா். இதில், ஒழுங்குமுறை வேளாண் விற்பனைக் கூட கண்காணிப்பாளா் ஜாய் பெனிக்ஸ், ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவா் க. தனராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் க. சோபா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com